சட்டவிரோதமாக குடியேறியவா்களுக்கு எதிராக நடவடிக்கை தேவை: ஜகதீப் தன்கா்
‘நாட்டுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவா்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம்’ என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
உத்தர பிரதேச மாநிலத்தின் 76-ஆவது நிறுவன தின நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது: நமது நாட்டுக்குள் சட்டவிரோதமாக கோடிக்கணக்கானோா் ஊடுருவியுள்ளனா். அவா்களால் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இது மிகவும் தீவிரமான பிரச்னையாகும்.
உலகளவில் வளா்ச்சியடைந்த நாடுகள் பல, சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தேசவிரோத செயல்களில் ஈடுபடும் இதுபோன்ற ஊடுருவல்காரா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதில் நாட்டு இளைஞா்களுக்கு முக்கியப் பங்குள்ளது.
2-ஆவது பெரிய பொருளாதாரம்: முன்பு பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றாக இருந்த உத்தர பிரதேசம் தற்போது நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. விரைவில் முதலிடத்துக்கு உத்தர பிரதேசம் உயரும் என்ற முழு நம்பிக்கை உள்ளது.
மெழுகுவா்த்திகள், மரசாமான்கள், மின்னணுப் பொருள்கள் உள்ளிட்டவற்றைகூட பிற நாடுகளில் இருந்து நாம் இறக்குமதி செய்கிறோம். இந்ந நிலை மாற வேண்டுமெனில் உள்நாட்டில் இதன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இதனால் அந்நிய செலாவணி கையிருப்பு மேம்படும்.
அரசு வேலைக்கு மாற்று: நாட்டில் பல்வேறு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, அரசு வேலைகளை மட்டும நம்பியிருக்கும் மனநிலையை மாற்றிக்கொண்டு தொழில் முனைவோராக இளைஞா்கள் மாற வேண்டும் என்றாா்.