அமித் ஷா மேஜையில் மாஜிக்கள் Files! சரணடைந்த எடப்பாடி?! | Elangovan Explains
சனி பரிகாரக் கோயில்கள்: `துன்பங்கள் நீங்கி நிம்மதி பிறக்கும்' - திருநள்ளாறுக்கு இணையான 5 இடங்கள்
திருவாதவூர் திருமறை நாதர்

மதுரையிலிருந்து வடக்கே 25 கி.மீ தொலைவிலும், மேலூரிலிருந்து மேற்கே எட்டு கி.மீ. தொலைவிலும் உள்ளது திருவாதவூர். இங்கு ஈசன் திருமறைநாதராக அருள்பாலிக்கிறார். அம்பிகைக்கு வேதநாயகி அம்மன் என்று பெயர்.
இங்குதான் சிவபெருமான் தன் காற்சிலம்பொலியை மாணிக்கவாசகர் கேட்கச் செய்தார். அங்குள்ள மண்டபம் ஒன்றை அமைத்தவர் மாணிக்கவாசகர். இங்கு மாணிக்கவாசகருக்குத் தனி சந்நிதி உள்ளது.
சனி பகவானின் வாதநோயை ஈசன் தீர்த்த தலம் என்பதாலேயே இதற்கு 'வாதவூர்' என்று பெயர் பெற்றது என்பார்கள். இத்தலத்து ஈசனை வழிபட்டால் கை, கால் முடம், பக்கவாதம் உள்ளிட்ட அனைத்து வகையான வாத நோய்களும் தீரும் என்று கூறப்படுகிறது.
மாண்டவ்ய முனிவரின் சாபத்தால் முடமான சனிபகவான் இத்தலத்து ஈசனை வழிபட்டதன் பயனாகச் சாப நீக்கம் பெற்றார். தான் பெற்ற சாப நீக்கத்தை பக்தர்களுக்கு அருளும் முகமாக இங்கு தனிச் சந்நிதி கொண்டுள்ளார் சனிபகவான். இங்கு சனி, ஒருகாலை மடக்கி வாகனத்தில் அமர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஷ்டம சனி, அர்த்திராஷ்டம சனி, கண்டகசனி, ஏழரைச் சனி போன்ற சனியினால் உண்டாகும் தோஷங்கள் தீர பக்தர்கள் இத்தலம் வந்து வழிபடுகிறார்கள். இங்கு வந்து ஈசனை வழிபாடு செய்து சனிபகவானையும் தரிசனம் செய்தால் பிணிகள் நீங்குவதோடு இன்ப வாழ்வு ஸித்திக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
குச்சனூர் சனிபகவான்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது குச்சனூர். இங்கு சுயம்புவாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார் சனிபகவான். சுரபி நதிக்கரையில் இயற்கையான சூழலில் அமைந்திருக்கும் இந்தத் திருக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் போன்ற கடும் தோஷங்களும் நீங்கும் என்கிறார்கள் பெரியோர்கள். இத்தலத்தில் அருளும் சனிபகவானுக்கு மூன்று கண்கள் என்பதால் இங்கு வழிபட்டால் சனி தசையால் உண்டாகும் தீமைகள் அனைத்தும் போகும்.
பிரம்மஹத்தி, செவ்வாய் தோஷம், குழந்தையின்மை, திருமணத் தடை உள்ளிட்ட தோஷம் இருப்பவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
வரும் பக்தர்கள், கோயில் முன்பாகச் செல்லும் சுரபி நதியில் நீராடி பழைய ஆடைகளை நீரில் விட்டு, புதிய ஆடையை அணிந்துகொள்வார்கள்.
நீராடிய பக்தர்கள் நதிக்கரையிலுள்ள விநாயகரை வழிபாடு செய்து கோயில் முன் மண்டபத்திற்குள் நுழைய வேண்டும். பின் பொரி, உப்பு உடைத்து பொரியைக் கொடிமரத்திலும் உப்பை அருகேயுள்ள தொட்டியிலும் இட வேண்டும்.
குழந்தை வரம் வேண்டுவோர், கோயிலின் பின்புறத்திலுள்ள விடத்தலை மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி வழிபாடு செய்து வந்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பொழிச்சலூர் சனிபகவான்
சென்னை பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி,மீ தொலைவில் உள்ளது பொழிச்சலூர் அகத்தீஸ்வரர் திருக்கோயில். தொண்டை மண்டல நவகிரக பரிகார ஸ்தலங்களில் ஒன்றான இத்தலம் வட திருநள்ளாறு என்றே போற்றப்படுகிறது.
அகத்திய முனிவர் பொதிகை மலைக்குச் செல்லும் வழியில் இங்கு தங்கி சுயம்பு லிங்கமாகத் திகழ்ந்த ஈசனுக்கு பூஜை செய்தார். அந்த பூஜைக்கு மகிழ்ந்து இறைவன் அகத்தியருக்குக் காட்சி கொடுத்தார். எனவே இத்தல இறைவனுக்கு அகத்தீஸ்வரர் என்பது திருநாமம். அம்பிகை இங்கு ஆனந்தவல்லியாக அருள்பாலிக்கிறார்.
பழைமை வாய்ந்த இந்தக் கோயில் கி.பி 12-ம் நூற்றாண்டு சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. கஜபிருஷ்ட விமான அமைப்புடன் திகழும் இந்த ஆலயத்துக்கு வந்தாலே மனதில் நிம்மதி பிறக்கும். சித்திரை 7,8,9 தேதிகளில் சூரியன் உதயமாகும்போது சூரியக் கிரணங்கள் சிவலிங்கத்தின் மீது விழும் என்பது இத்தல சிறப்பாகும்.
கண்ட சனி, ஜன்ம சனி, ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்திராஷ்டம சனி என்று சனியினால் துன்பப்படுபவர்களுக்கு இது மிகச்சிறந்த பரிகாரத்தலம். இத்தலத்துக்கு வந்து ஈசனை தரிசித்து சின் முத்திரையுடன் அருளும் சனிபகவானை தரிசனம் செய்தால் சனி தோஷங்கள் நீங்கும்.
இந்த ஆலயத்தில் சனிபகவானுக்கு நிவேதனம் செய்யும் நேரத்தில் சனிபகவானுடைய வாகனமானக் கருதப்படும் காக்கைகள் கூட்டமாக வந்து அர்ச்சகர் போடும் அன்னங்களை சாப்பிட்டுச் செல்லும்.
பொங்கு சனீஸ்வரர் ஆலயம்

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கொள்ளிக்காடு. இங்கே அருளும் ஈசனுக்கு அக்னீஸ்வரர் என்பது திருநாமம். சனிபகவான் ஒருமுறை திருக்கொள்ளிக்காடு வந்து ஈசனை நோக்கிக் கடும் தவம் புரிந்தார். சிவபூஜைகள் செய்தார். இதனால் சிவனருள் பெற்று, பொங்கு சனியானார் என்கிறது தலபுராணம். இத்தலத்தில் ஈசன் அக்னிப் பிழம்பாக சனீஸ்வரருக்குக் காட்சி அருளினார் என்பார்கள்.
பொங்கு சனி பகவான் தனிச்சந்நிதியில் இங்கே காட்சி தருகிறார். கைகளில், கலப்பை, காகத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி, அபய வரத முத்திரை எனத் திகழும் சனீஸ்வரரை வழிபட்டாலே பாவங்கள் தீரும் என்கிறார்கள்.
இங்கு சனீஸ்வரருக்கு அருகில் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீமகாலட்சுமித் தாயார். எனவே, திருக்கொள்ளிக்காட்டில் பொங்கு சனீஸ்வரரையும் மகாலக்ஷ்மி தாயாரையும் மனதார வேண்டிக்கொண்டாலே, சகல மங்கலங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சனிபகவான் பொங்கு சனீஸ்வரராக அருளும் தலம் இது என்பதால் அஷ்டம சனி, கண்டக சனி, ஏழரைச் சனி நடைபெறுபவர்கள் இங்கு வந்து வழிபட்டால் வாழ்வில் ஏற்றம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
ஏரிக்குப்பம் யந்திர சனீஸ்வரர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ளது ஏரிக்குப்பம், இங்குள்ள ஆலயத்தில்தான் சனிபகவான் யந்திர வடிவில் அருள்கிறார். இங்கு சனிபகவான் கருணையோடு வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காரணம், தன் தாயாரான சாயாதேவி சனி பகவான் அருகிலேயே யந்திர் வடிவில் அருள்வதுதான் என்கிறார்கள்.
தாய் அருகில் இருப்பதால் சனி பகவான் எப்போதுமே சாந்தமாகவே இருப்பார். இந்த சனி பகவான் யந்திர வடிவில் ஐந்தடி உயரமும் இரண்டரை அடி அகலமும் கொண்டு அறுங்கோண வடிவத்தில் அமைந்துள்ளார்.
அதன் ஆறு முனைகளில் திரிசூலமும் அடிப்பாகத்தில் மகாலட்சுமி அனுமார் வடிவங்களும் இடம்பெற்றுள்ளன. யந்திர ரூபமாக ருளும் இந்த சனிபகவானை ஒருமுறை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும். சனி தோஷங்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.