`கனவில் வந்தாள்... கொலுசு கேட்டாள்' - வாழ்வு மாற, வசந்த நவராத்திரியில் நீங்கள் வணங்க வேண்டிய தலம்
வாழ்வை மாற்றும் வசந்த நவராத்திரி
அன்னை ஆதிசக்தியை வழிபடும் நாள்களில் முக்கியமானவை நவராத்திரி பண்டிகை. ஓர் ஆண்டில் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படும். அவை, சியாமளா நவராத்திரி (தை மாதம்,) வசந்த நவராத்திரி (பங்குனி - சித்திரை மாதம்,) ஆஷாட நவராத்திரி (ஆடி மாதம்,) சாரதா நவராத்திரி (புரட்டாசி மாதம்) ஆகியன. இந்த நாலு நவராத்திரிகளுமே முற்காலத்தில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டன. ஒவ்வொரு நவராத்திரிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அன்னையை நவராத்திரி நாள்களில் தரிசனம் செய்து வழிபட்டால் தீராத கஷ்டங்களும் தீரும். வேண்டும் வரம் கிடைக்கும்.
அப்படிப்பட்ட மகிமைவாய்ந்த நவராத்திரிகளில் ஒன்றான வசந்த நவராத்திரி 2025 ம் ஆண்டு மார்ச் 30 தொடங்கி ஏப்ரல் 7 வரை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நாள்களில் அம்பிகையை லலிதாம்பிகையாக வழிபடவேண்டும் என்கின்றன சாஸ்திரங்கள். லலிதாம்பிகையே ஆதிபராசக்தியின் வடிவம். அம்பிகை உபாசனையில் உயர்ந்த நிலையைக் கொண்டவள் அவள்தான். அவளே ஸ்ரீசக்கரத்தில் அருள்பவள். ஸ்ரீபுரம் சிந்தாமணி நகரம் என்கிற ஸ்தானத்தில் அமர்ந்து பிரபஞ்சம் முழுமையையும் கட்டிக்காப்பவள் என்கின்றன ஞான நூல்கள். அப்படிப்பட்ட லலிதா பரமேஸ்வரியாக அம்பிகையை வழிபட்டால் பிறவிப்பிணிகள் தீரும். வாழ்வில் பிரச்னைகள் விலகும். எதிரிகள் ஒழிந்துபோவார்கள். கடன் பிரச்னைகள் விலகி செல்வ வளம் ஸித்திக்கும். இப்படிப்பட்ட அற்புதமான பலன்களைப் பெற வசந்த நவராத்திரியில் அன்னை லலிதாம்பிகையை தரிசனம் செய்து வழிபட்டாலே போதுமானது.

அப்படி அம்பிகை லலிதாவாக அருள்புரியும் திருத்தலங்களில் மிகவும் முக்கியமான திருமீயச்சூர். வாருங்கள் அந்த அற்புதத்தலத்தின் மகிமைகளையும் அங்கு அம்பிகையை எப்படி வழிபடவேண்டும் என்பதையும் அறிந்துகொள்வோம்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில், பேரளம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள ஊர் திருமீயச்சூர். இங்கு ஸ்ரீலலிதாம்பிகா சமேத ஸ்ரீமேகநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த ஆலய அன்னை ஸ்ரீலலிதாம்பிகை கொலுசு அணிந்திருப்பாள்.
கனவில் வந்தாள்... கொலுசு கேட்டாள்!
சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு பக்தை ஒருவரின் கனவில் அம்பிகை தோன்றி, 'எனக்குக் கொலுசு கொண்டுவா' என்று கேட்டாளாம். உடனே சிலிர்த்தெழுந்த பக்தை தங்கக் கொலுசு ஒன்றை வாங்கிக்கொண்டு ஒவ்வொரு அம்மன் கோயிலாகச் சென்று அம்பிகையின் பாதத்தில் கொலுசு மாட்ட வசதி உள்ளதா என்று தேடினாளாம். அப்படி அவர் திருமீயச்சூர் வந்தபோது கனவில் தனக்குக் காட்சி கொடுத்த அம்பிகை அவள்தான் என்பதை உணர்ந்து அம்பிகைக்கு கொலுசு மாட்டிவிடும்படிக் கேட்டுக்கொண்டார்.
ஆனால் அங்கிருந்த அர்ச்சகர்கள், 'விக்ரகத்தில் கொலுசுபோட முடியாது' என்று சொல்ல அந்த பக்தையோ விடாப்பிடியாக, 'இல்லை... இந்த அம்பாள்தான் கேட்டது. நன்றாகப் பாருங்கள். கொலுசு அணிவிக்க வழி இருக்கும்' என்றார். அப்போது அர்ச்சகர்கள் அம்பிகையின் திருவடியை ஆராய அதில் ஒரு துவாரம் இருப்பது தெரிந்தது. அபிஷேகப் பொருள்கள் சென்று அந்த துவாரத்தை அடைத்திருந்தது.

உடனே அதை சுத்தம் செய்து அம்பிகைக்கு அந்த கொலுசை அணிவித்து அழகு பார்த்தனர். அன்றுமுதல் இன்றுவரை அம்பிகை அற்புத கொலுசோடு அங்கே திருக்காட்சி தருகிறாள். இந்த அற்புதத்தலத்தின் புராணச் சிறப்புகள் ஏராளம்.
இன்றும் வழிபடும் சூரியன்
ஒருமுறை சூரியன் சிவபெருமானின் கோபத்துக்கு ஆளாகி சாபம் பெற்றதோடு தன் ஒளியையும் இழந்தார். தன் தவற்றை உணர்ந்து விமோசனம் வேண்டிய சூரியன், சிவ வழிபாட்டைத் தொடங்கினான். ஆனால் சிவனின் சாபம் அவ்வளவு எளிதில் தீர்ந்துவிடுமா... நாள்கள் ஆனதே தவிர சாபம் தீரவில்லை. சூரியன் மீண்டும் ஈசனை தரிசித்து, 'ஏன் இன்னும் எனக்கு சாபம் தீரவில்லை' என்று கேட்டான்.
அவசரப்படும் சூரியனைக் கண்டு அம்பாள் கோபம்கொண்டு சூரியனை சபிக்க முனைய, சிவனார் அவளை ஆற்றுப்படுத்தி, சூரியனுக்கு அருள்புரிந்தார். அப்படி சூரியனுக்கு ஈசன் அருள்பாலித்த தலம் திருமீயச்சூர். அந்த நன்றிக்காக ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் 21 முதல் 27-ஆம் தேதி வரை, ஸ்வாமியைத் தன் கிரணங்களால் தழுவி இத்தலத்தில் பூஜிக்கிறார் சூரியன். ஆகவே இது சூரியப் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.
சதாசிவ பீடத்தில் லலிதை
இத்தலத்தில் ஈசன் மேகநாதராக அருள்பாலிக்கிறார். அன்னையோ லலிதாம்பிகையாக எழுந்தருளியிருக்கிறாள். இங்கே, ஶ்ரீசதாசிவலிங்க பீடத்தில் - ஶ்ரீசக்ரத்தில் இருந்தபடி அகில உலகத்தையும் ஆட்சி செய்கிறாள் லலிதாம்பிகை. மேலும் சகல சாபங்களையும் நீக்கும், பாராயணம் செய்தால் வேதத்துக்கு இணையான பலனைத் தந்திடும் லலிதா சகஸ்ரநாமம் பிறந்தது இந்தத் தலத்தில்தான்.
புண்ணிய நாள்கள், வெள்ளிக் கிழமைகள், ஜன்ம, அனுஜன்ம, திரிஜன்ம நட்சத்திர நாள்கள், நவமி, சதுர்த்தசி, பௌர்ணமி நாள்களில் லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்வது சிறந்த பலன்களை அளிக்கும்.
பௌர்ணமியன்று சந்திரனில் அம்பிகை இருப்பதாகப் பாவித்து, லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தால், தீராத நோய்கள் நீங்கி நீண்ட ஆயுள் பெறலாம். இவ்வளவு சக்தி மிகுந்த அற்புதமான இந்த லலிதா சகஸ்ரநாமம் உருவான திருத்தலம், திருமீயச்சூர்.
12 ராசிகளுக்கும் 12 நாகர்கள்
விஜயதசமி, மாசி மாதத்தின் அஷ்டமி தினம், வைகாசி பௌர்ணமி ஆகிய தினங்களில் அம்பாள் சந்நிதியில் நிகழும் அன்னப்பாவாடை சார்த்தும் வைபவம் பிரசித்திபெற்றது.
சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வெண் பொங்கல், பட்சணங்கள், பழ வகைகள் என வைத்து, நெய்யை ஊற்றிக் குளம் போலாக்கிவிடுவார்கள். அம்பிகையின் சந்நிதிக்கு முன்னேயுள்ள அர்த்த மண்டபத்தில்... குளம்போல் ததும்பியிருக்கும் நெய்யில், அம்பிகையின் திருவுருவம் பிரதிபலிக்கும் காட்சியைக் கண்டால் பிறவிப்பிணி தீரும். செல்வ வளம் சேரும் என்கிறார்கள்.
12 ராசிகளுக்கும் உரிய 12 நாகர்கள் இங்கே உள்ளனர். இவர்களுக்குத் தீபமேற்றி, அர்ச்சனைசெய்து வழிபட்டால், ராகு - கேது தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கை.
இங்கே எட்டுத் திருக்கரங்களுடன் திகழும் துர்கை விசேஷம் வாய்ந்தவள். இவளின் கரத்தில் சுகபிரம்ம ரிஷியே கிளியாக அமர்ந்திருப்பதாக ஐதிகம்.காலதேவனான எமதருமன் வழிபட்ட தலம் இது. குறிப்பாக பிரண்டையை அன்னத்தில் கலந்து நைவேத்தியம் செய்து வணங்கி வரம் பெற்றாராம். எனவே இங்கு இன்றைக்கும், உச்சிக்காலத்தில் ஸ்வாமிக்கு பிரண்டை சாதம் நைவேத்தியம் படைக்கப்படுகிறது. பக்தர்கள் இந்தப் பிரசாதத்தை வாங்கி உட்கொண்டால், தடைகள் அகலும்; ஆயுள் கூடும் என்பது ஐதிகம்.
அகத்தியர் தன் மனைவி லோபமுத்திரையுடன் இங்கே வந்து நவரத்தின பாமாலை பாடி வழிபட்டார். அற்புதமான இந்தத் துதியைப் பாடி லலிதாம்பிகையை வணங்கினால், உள்ளம் குளிர்ந்து அருளையும் பொருளையும் அள்ளித் தருவாளாம் தேவி!
வசந்த நவராத்திரி நாள்களில் இந்த ஆலயத்துக்குச் சென்று அன்னையை தரிசனம் செய்வது மிகவும் விசேஷம். வாழ்வில் தீராத கஷ்டங்களும் தீரும். நல் வாழ்வு பிறக்கும். இந்தத் தலத்துக்கு வந்து வழிபட இயலாதவர்கள் அம்பிகை, லலிதாம்பிகையாக அருள்பாலிக்கும் ஆலயங்கள் ஏதேனும் ஒன்றுக்குச் சென்று வழிபடலாம். அல்லது வீட்டில் ஸ்ரீராஜராஜேஸ்வரி அல்லது லலிதாம்பிகையின் திருவுருவப்படத்தை வைத்து மலர்கள் சாத்தி வழிபடுவது விசேஷம். குறிப்பாக கடம்ப மலர்கள் கிடைத்தால் அன்னைக்குச் சூட்டுவது விசேஷம். கடம்ப மலர் சூட்டி வழிபடுவோரின் துன்பத்தை நீக்குவதோடு சகல சௌக்கியங்களையும் அருள்வாள் அன்னை லலிதாம்பிகை.