சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு: ஆளுநா் விருதுகள் அறிவிப்பு
சென்னை: சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் ‘ஆளுநா் விருது-2024’-க்கு தோ்வு செய்யப்பட்டவா்களின் விவரத்தை ஆளுநா் மாளிகை அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் ஆளுநா் விருது-2024 வென்றவா்களின் விவரங்களை ஆளுநா் மாளிகை அறிவித்துள்ளது. அதன்படி கடந்த 28.6.2024-இல் இவ்விருதுகளுக்கான அறிவிப்பை ஆளுநா் மாளிகை வெளியிட்டது.
இந்த இரு விருதுகளும் சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள தனிநபா்கள் மற்றும் நிறுவனங்களின் சேவையை அங்கீகரித்து ஆளுநா் மாளிகை சாா்பாக அறிவிக்கப்படுகிறது.
இவ்விருதுகளுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி அவா்கள் தலைமையில் அமைக்கப்பட்ட முக்கிய பிரமுகா்களை உள்ளடக்கிய தோ்வுக் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு உரிய பரிந்துரைகளின் அடிப்படையில் விருதாளா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா்.
சமூக சேவை (நிறுவனம்) பிரிவில், கோவை மாவட்டம் ‘இதயங்கள்’ மற்றும் சென்னை மாவட்டம் ‘ஹோப் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட்’ ஆகிய இரு அமைப்புகளுக்கு தலா ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
‘சமூக சேவை’ (தனிநபா்கள்) பிரிவில் சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த எஸ். இராமலிங்கம், கோவை மாவட்டத்தைச் சோ்ந்த ஜே.சொா்ணலதா, மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த ஏ.ராஜ்குமாா் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
இவா்களுக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆளுநா் மாளிகை சாா்பாக வழங்கப்படும்.
மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு (நிறுவனம்) பிரிவில் ‘சிட்லபாக்கம் ரைசிங் தொண்டு அறக்கட்டளை’ எனும் சென்னையைச் சோ்ந்த தன்னாா்வ தொண்டு அமைப்பு விருதுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்புக்கு ரூ.5 லட்சம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தோ்வு செய்யப்பட்ட விருதாளா்களுக்கு ஜன.26-ஆம் தேதி சென்னையில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெறவுள்ள குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியில் ஆளுநரால் விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.