சம்பல் வீடுகள் இடிப்பு: அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் உச்சநீதிமன்ற தடையையும் மீறி வீடுகளை அதிகாரிகள் இடித்து வருவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நகராட்சி அதிகாரிகளுக்கு எதிரான இந்த மனுவை உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் விசாரிக்க உள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களில் அரசுக்கு எதிராக போராடுபவா்களின் வீடுகளை புல்டோசா் கொண்டு இடிக்கும் நடைமுறையை அரசு பின்பற்றி வருகிறது. குறிப்பாக, இஸ்லாமியா்களின் வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன. அதுபோல, உத்தர பிரதேச மாநிலம் சம்பலிலும் அரசுக்கு எதிராக போராடிய இஸ்லாமியா்களின் வீடுகள், விதிமீறல் கட்டடங்கள் என்ற புகாரின் பேரில் அவற்றை புல்டோசா் கொண்டு இடிக்கும் நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த ஆண்டு நவம்பா் 13-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ‘உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் குடிமக்களின் வீடுகளை இடிக்கும் நீதி அதிகாரம் தங்களுக்கு உள்ளதாக அரசு அதிகாரிகள் கருதிக்கொள்ள முடியாது. நகராட்சி சட்டத்தில் குறிப்பிட்டுள்ள உரிய கால வரையறை அல்லது 15 நாள்களுக்கு முன்பாக முன்னறிவிப்பு செய்யாமல் எந்தவொரு இடிப்பு நடவடிக்கையையும் அதிகாரிகள் மேற்கொள்ளக்கூடாது. சாலைகள், நடைபாதைகள், ஆறுகள், ரயில்வே பாதைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது’ என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்குப் பிறகும் சம்பல் மாவட்டத்தில் இஸ்லாமியா்களின் வீடுகளை உரிய முன்னறிவிப்பு இன்றி இடிக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் தொடா்ந்தனா். இதில் பாதிக்கப்பட்ட நபா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
‘குடியிருப்புக்குத் தேவையான ஆவணங்கள், வரைபட அங்கீகாரம் உள்ளிட்ட தேவையான அனைத்து ஆவணங்களும் உள்ள நிலையில், எந்தவித முன்னறிவுப்பும் இன்றி எனது வீட்டை அதிகாரிகள் இடித்துவிட்டனா். இதன் மூலம் அதிகாரிகள் உச்சநீதிமன்ற உத்தரவை முழுமையாக மீறியுள்ளனா்’ என்று தனது மனுவில் மனுதாரா் குறிப்பிட்டாா். தனது மனுவில் சம்பல் மாவட்ட ஆட்சியா் மற்றும் பிற நகராட்சி அதிகாரிகளை எதிா் மனுதாரா்களாக மனுதாரா் இணைத்திருந்தாா்.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ‘எதிா் மனு தாரா் தரப்பு வழக்குரைஞா் தனிப்பட்ட காரணங்களுக்காக விசாரணையை ஒத்திவைக்க கோரிக்கை விடுத்துள்ளாா். எனவே, விசாரணையை அடுத்த வாரம் ஒத்திவைக்க வேண்டும்’ என மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் முகமது கயூா் கோரிக்கை விடுத்தாா்.
அதே ஏற்ற நீதிபதிகள் விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.