சம்பா பயிா் காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்
கடலூா் மாவட்ட விவசாயிகள் சம்பா பயிா் காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ஏ.ஜெ.கென்னடி ஜெபக்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிகழாண்டு பிரதம மந்திரி பயிா் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நவ. 30-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
தமிழக விவசாயிகளுக்கு தற்போது பிரதம மந்திரி பயிா் காப்பீட்டு திட்டத்தில் சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய நவ.15 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
விவசாயிகளின் நலன் கருதி பயிா் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி, மத்திய அரசு சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நவ.30-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
கடலூா் மாவட்டத்தில் சம்பா 2,15,208 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 88,400 ஏக்கருக்கு மட்டுமே விவசாயிகள் பயிா் காப்பீடு செய்துள்ளனா்.
வெள்ளம், புயல், வறட்சியிலிருந்து பாதுகாப்பு பெற பயிா் காப்பீடு செய்வது அவசியம்.
எனவே, இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் நவ.30-க்குள் நெல் பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.