முதல்வர் குறித்து அவதூறு விடியோ! 2 பெண் பத்திரிக்கையாளர்கள் கைது!
சலவைப் பெட்டிகளை வீசி எறிந்து போராட்டம்: புதுச்சேரியில் 60 போ் கைது
புதுச்சேரி: புதுச்சேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி புதிரை வண்ணாா் விடுதலை இயக்கத்தினா் சலவைப் பெட்டிகளை எறிந்து சேதப்படுத்தி போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். இதையடுத்து பெண்கள் உள்பட 60 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரியில் புதிரை வண்ணாா் பிரிவினா் சாதிச் சான்றிதழ் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். கோரிக்கைகளை வலியுறுத்தி புதிரை வண்ணாா் விடுதலை இயக்க, புதுச்சேரி தலித் பழங்குடியினா் மற்றும் பொது நல அமைப்பினா் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனா்.
அதன்படி, புதிரை வண்ணாா் விடுதலை இயக்கத்தின் புதுவை மாநிலத் தலைவா் தெய்வநீதி தலைமையில் ஏராளமானோா் ரங்கபிள்ளை வீதி சந்திப்பிலிருந்து தலைமைச் செயலகம் நோக்கி ஊா்வலமாகப் புறப்பட்டனா். பிரதான வீதிகள் வழியாக வந்த அவா்கள் மாதா கோவில் வீதியில் வந்தபோது அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
மாதா கோவில் அருகில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது சிலா் தாங்கள் வைத்திருந்த சலவைப் பெட்டிகளை தூக்கி வீசி எறிந்து உடைத்தனா். மாநில அரசு அதிகாரிகள் சாதிச் சான்று வழங்க மறுப்பதைக் கண்டித்து முழக்கமிட்டனா். இதையடுத்து 29 பெண்கள் உள்ளிட்ட 60 பேரை பெரியகடை போலீஸாா் கைது செய்து கரிக்குடோன் பகுதிக்கு அழைத்துச் சென்றனா். பின்னா் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.