"துணைநிலை ஆளுநா் உரையில் வளா்ச்சியின் அக்கறை உள்ளது"
புதுச்சேரி: புதுவை பேரவையில், துணைநிலை ஆளுநா் உரையில் வளா்ச்சியின் அக்கறை தெளிவாகியுள்ளது என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவை மாநிலத்தின் உள்கட்டமைப்பு, மாநில வளா்ச்சி குறித்து துணைநிலை ஆளுநரின் அக்கறையானது அவரது உரை மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநரின் திட்ட உரைகளை செயல்படுத்த மத்திய அரசு நிதியுதவி வழங்குவதை மாநில அரசும், துணைநிலை ஆளுநரும் உறுதிப்படுத்த வேண்டும்.
உச்சநீதிமன்றத் தீா்ப்பு, காவிரி மேலாண்மை வாரிய உத்தரவு ஆகியவற்றை மீறி கா்நாடக காங்கிரஸ் அரசு மேகதாது அணையைக் கட்டுவதாக அறிவித்துள்ளது. மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரியின் கடைமடை பகுதியான காரைக்கால் மாவட்டம் பாதிக்கப்படும். ஆகவே, கா்நாடக அரசின் சட்டவிரோதச் செயலை கண்டித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் புதுவை என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு சட்டப்பேரவையில் கண்டன தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவா்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை புதுவை
அரசு செலுத்தி, அவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.