சல்மான் கானுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு... கொலை மிரட்டல் ஏன்? - கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்!
ரூ.5 கோடி கேட்டு கொலை மிரட்டல்..
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சல்மான் கான் எப்போதும் பலத்த பாதுகாப்புடனே வெளியில் செல்லவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இரண்டு நாள்களுக்கு முன்பு சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார். பிகா ராம் பிஷ்னோய் என்ற அந்த நபர் ரூ.5 கோடி கொடுக்கவேண்டும் என்று கேட்டு சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தார். பிகாராமிடம் மும்பை போலீஸார் விசாரித்த போது கொலை மிரட்டல் விடுத்ததற்காக கவலைப்பட்டதாக தெரியவில்லை.
அதோடு பிஷ்னோய் சமுதாயத்திற்காக சிறைக்கு செல்ல தயாராகவே இருந்ததாக அந்த நபர் விசாரணையில் தெரிவித்துள்ளார். போலீஸாரின் விசாரணையில் லாரன்ஸ் பிஷ்னோய் எங்களது கடவுள் போன்றவர் என்றும், பிஷ்னோய் சமுதாயத்திற்கு ஒரு கோயில் கட்டுவதற்காகத்தான் சல்மான் கானிடம் ரூ.5 கோடி கேட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அதோடு அடிக்கடி லாரன்ஸ் பிஷ்னோய் வீடியோ பார்த்து அதனால் கவரப்பட்டுள்ளார். விசாரணையில் லாரன்ஸ் பிஷ்னோய் செயல்களை நியாயப்படுத்தியுள்ள பிகாராம், நடிகர் சல்மான் கானின் முந்தைய செயல்களையும் குறிப்பிட்டுள்ளார்.
சல்மான் கான் இதற்கு முன்பு கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய விவகாரத்திலோ அல்லது மான்களை வேட்டையாடியதிலோ இது வரை மன்னிப்பு கேட்கவில்லை என்றும், லாரன்ஸ் பிஷ்னோயிக்காக தான் சிறைக்கு செல்ல தயாராக இருப்பதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
நான்கு அடுக்கு பாதுகாப்பு..
தொடர்ந்து அச்சுறுத்தல் வந்து கொண்டிருப்பதால் சல்மான் கானுக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர் தற்போது சிகந்தர் படப்பிடிப்புக்காக ஐதராபாத்தில் இருக்கிறார். அவருக்கு சல்மான் கானின் தனி பாதுகாவலர்கள், மும்பை போலீஸார், ஐதராபாத் போலீஸார் மற்றும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். ஐதராபாத்தில் உள்ள பேலஸ் ஹோட்டலில் இந்த படப்பிடிப்பு நடைபெறுகிறது. இங்கு தான் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இப்படப்பிடிப்பு ஒரு மாதம் அங்கு நடைபெறும் என்று சல்மான் கான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் கான் சொந்தமாக 50 முதல் 70 பேர் கொண்ட பாதுகாவலர்களையும் அழைத்துச் சென்றுள்ளார். படப்பிடிப்பில் பங்கேற்கும் அனைவரும் தினமும் முழுமையாக சோதிக்கப்பட்டு அடையாள அட்டை சரிபார்க்கப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb