`ஸ்கேன் எடுக்கணும்; செயினை கழற்றுங்க' - நோயாளியிடம் மருத்துவமனையில் நடந்த துணிகர கொள்ளை!
சென்னை ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மணி (59). இவரின் மனைவி அருணா (55). இவருக்கு உடல் நலம் சரியில்லாததால் அந்தப் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையின் 5-வது மாடியில் உள்ள வார்டில் கடந்த 2-ம் தேதி அருணாவும் மணியும் இருந்தபோது 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அங்கு வ0ந்தார். அவர், மணியிடம், உங்களை எமெர்ஜென்ஸி வார்டில் டாக்டர் அழைப்பதாக கூறினார். உடனே மணி, நீங்கள் யார் என்று அந்தப் பெண்ணிடம் கேட்டபோது, தான் ரத்த பரிசோதனை செய்ய வச்திருப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து மணி எந்த டாக்டர் என்று அந்த பெண்ணிடம் விசாரித்திருக்கிறார். அதற்கு அந்த பெண் நான் சிலிப் வாங்கிக் கொண்டு வருகிறேன் என்று கூறிவிட்டு நைசாக அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதையடுத்து மணி, அந்த வார்டில் பணிபுரியும் நர்ஸிடம் விவரத்தைக் கூறியிருக்கிறார். அதற்கு வார்டிலிருந்த நர்ஸ், எனக்கு எதுவும் தெரியவில்லை. ரிசப்சனில் கேட்டுக் கொள்ளும்படி பதிலளித்திருக்கிறார். அதனால் மணி, மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து ரிசப்சனில் கேட்டபோது அவரை யாரும் அழைக்கவில்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து மனைவி அனுமதிக்கப்பட்ட வார்டுக்கு மணி சென்றார். அப்போது அருணா, கண்ணீர்மல்க தன்னுடைய தாலிச் செயினை பெண் ஒருவர் பறித்துச் சென்றுவிட்டதாக கூறினார். உடனே மணி, தன்னுடைய மனைவியை சமாதானப்படுத்திவிட்டு என்ன நடந்தது என்று விசாரித்தார். அப்போது அவரின் மனைவி அருணா, ` ஸ்கேன் எடுக்கணும், தாலிச் செயினை கழற்றி வையுங்கள்' என்று இளம்பெண் ஒருவர் கூறினார். என்னால் தாலி செயினை கழற்ற முடியவில்லை. அதனால் அந்தப் பெண்ணே தாலி செயினை கழற்றினார். பின்னர் அவர், இதோ வருகிறேன் என்று கூறிவிட்டு தாலி செயினோடு எஸ்கேப் ஆகிவிட்டார் என கூறினார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மணி, வார்டிலிருந்த நர்ஸிடமும் அங்கிருந்த சக நோயாளிகளிடமும் விவரத்தைக் கூறி விசாரித்திருக்கிறார் . அப்போது அங்கிருந்தவர்கள், தங்களுக்கு எதுவும் தெரியாது என்று பதிலளித்திருக்கிறார்கள்.
இதையடுத்து மணி, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சம்பவம் நடந்த மருத்துவமனைக்குச் சென்ற போலீஸார் அங்கிருந்த சி.சி.டி.வி பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது அருணாவை ஏமாற்றி தங்க செயினைப் பறித்துச் சென்ற பெண்ணின் புகைப்படம் தெளிவாக பதிவாகியிருந்தது. அதை மருத்துவமனை ஊழியர்களிடம் காண்பித்து போலீஸார் விசாரித்தபோது அந்தப் பெண் குறித்த அடையாளம் தெரியவந்தது. அவரின் பெயர் வரலட்சுமி என்றும் வியாசர்பாடியைச் சேர்ந்தவர் என்றும் ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து வரலட்சுமியைப் பிடித்து போலீஸார் விசாரித்தபோது அருணாவிடம் தாலி செயினைப் பறித்தது தெரியவந்தது. அந்த செயினை வரலட்சுமி விற்று 1,40,000 ரூபாயை வாங்கியிருந்தார். அதனால் அந்தப் பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது சம்பவம் நடந்த மருத்துவமனையில் வரலட்சுமி, சில மாதங்கள் துப்பரவு பணியாளராக வேலை செய்திருக்கிறார். பின்னர் வேலையிலிருந்து அவர் விலகிவிட்டார். அதனால் மருத்துவமனைக்குள் எப்படி செல்வது என்ற தகவல் வரலட்சுமிக்கு தெரியும் என்பதால் சம்பவத்தன்று இந்த துணிகர செயலில் அவர் ஈடுபட்டிருக்கிறார். விசாரணைக்குப்பிறகு வரலட்சுமியை (41) கைது செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.