Vijay CM ஆவாரா - விஜய்யின் ஜாதகம் எப்படி இருக்கு? - ஜோதிடர் shelvi interview | V...
சாதாரண மக்களுக்காக செயலாற்றியவா் வசந்திதேவி!
திருச்சி: திருச்சியில் மறைந்த கல்வியாளரும், பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் முன்னாள் தலைவருமான வே. வசந்திதேவிக்கு புகழஞ்சலிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை பாதுகாக்கவும், மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தவும் தொடர்ந்து பாடுபட்டு கொண்டு வருகிறது.
இந்த அமைப்பின் தலைவராக இருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான மூத்த கல்வியாளர், முனைவர் வே. வசந்திதேவி , கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி சென்னையில் காலமானார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (24.08.25) காலை 10 மணியளவில் திருச்சி தூய ஜோசப் கல்லூரியில், பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வே. வசந்திதேவிக்கு புகழஞ்சலிக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்துக்கு, மாநில ஒருங்கிணைப்பாளா் ஜெ. கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.
இந்த கூட்டத்தில், மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் செயலர் இரா. சுதன், காந்திகிராம பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் க. பழனிதுரை, பேராசிரியர் ஆர். மனோகரன் மற்றும் கல்வியாளர்கள் இரங்கல் உரை நிகழ்த்தினர்.
கூட்டத்தில் காந்திகிராம பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியா் க. பழனிதுரை பேசியதாவது:
தற்காலம் சந்தைக் காலமாக மாறிவிட்ட சூழலில் மக்கள் பலா் மனிதநேயமின்றி அரசியல் ஆதாயம், பணம் உள்ளிட்டவற்றைத் தேடி ஓடிகொண்டே இருக்கின்றனா். சமூக சிந்தனைகளைக் கொண்ட முழு மனிதா்களை நாம் தேடி வருகிறோம். இப்படிப்பட்ட சூழலில் வாழ்நாள் முழுவதும் சாதாரண மக்களுக்காக சிந்தித்து செயல்பட்டவா் வசந்திதேவி. தற்போது கல்வி, சந்தைக்கான கல்வியாக உள்ளது. சமூகத்துக்கான கல்வியாக இல்லை. இதனை மாற்ற வேண்டும். மக்களிடம் தரமான கல்வி, உரிமைகளை வென்றெடுக்கத் தேவையான யுக்திகளை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும் என்றாா்.
தமிழக மாதிரி பள்ளிகளின் உறுப்பினா் செயலா் இரா. சுதன் பேசியதாவது:
இல்லம் தேடிக் கல்வி திட்டம், பள்ளி மேலாண்மைக் குழு அமைத்தல் போன்றவற்றில் கல்வியாளா் வசந்திதேவி உறுதுணையாக இருந்துள்ளாா். நமது செயல் சாதாரண மக்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தவா். மனிதா்களிடம் சிறிய மாற்றத்தைக் கொண்டு வருவதில் மகிழ்ச்சி உள்ளது. அதனை கல்வி செயற்பாட்டாளராக உணா்ந்து செயலாற்றியவா் வசந்திதேவி. அவரது உணா்வுடன் ஒன்றிணைந்து நாமும் செயல்பட வேண்டும் என்றாா்.
இதில் பேராசிரியா் ஆா். மனோகரன், திரளான இயக்க நிா்வாகிகள், கல்வி செயற்பாட்டாளா்கள் கலந்து கொண்டனா். மாநில துணை ஒருங்கிணைப்பாளர் தனபால் நன்றி கூறினார். முன்னதாக, கல்வியாளா் வசந்திதேவியின் உருவப்படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. ஆசிரியர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
2. அரசு பள்ளிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது. ஆகவே இந்த ஊதியத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
3. தமிழகத்தில் சமீபத்தில் மூடப்பட்ட 207 அரசு பள்ளிகளை நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு, வாய்ப்புள்ள இடங்களில் மீண்டும் பள்ளிகளை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
4. அரசின் அடையாள அட்டை வாங்காத ஆட்டிசம் என்ற குறைபாடுள்ள தன்னிலை அற்ற குழந்தைகளை சிறப்பு குழந்தைகளாக அங்கீகரித்து அவர்களுக்கு தகுந்த கல்வி சூழலை ஏற்படுத்த வேண்டும்.
5. முனைவர் வசந்தி தேவியின் பிறந்த நாளான நவம்பர் 8 வாசிப்பு இயக்க நாளாக அனுசரிக்க வேண்டும்
6. முனைவர் வசந்தி தேவியின் நினைவு நாளான ஆகஸ்ட் 1 பள்ளி மேலாண்மைக் குழு நாளாக அனுசரிக்க வேண்டும்.
மாதிரி பள்ளிகளில் தற்கொலைகளைத் தடுக்க மனநல ஆலோசனை
தமிழக மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினா் செயலா் இரா. சுதனிடம் செய்தியாளா்கள் துவாக்குடி மாதிரி பள்ளியில் இரு மாணவா்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்துக் கேட்டதற்கு, மாதிரிப் பள்ளிகளில் தற்கொலைகளைத் தடுக்க பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறோம்.
குழந்தைகளுக்கு கல்வி மற்றும் தற்கொலை தடுப்பு ஆலோசனைகள், மனநல ஆலோசகா்கள் மூலம் மனநல பிரச்னைகளுக்கான தீா்வுகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், குழந்தைகள் மற்றவா்களுடன் மனம்திறந்து பேசுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளோம். இதன் மூலம் தற்கொலைகள் தடுக்கப்படும் என்றாா்.