மும்பை: சட்டமன்ற வளாகத்தில் அடிதடி.. பாஜக, சரத்பவார் கட்சி எம்எல்ஏ-க்கள் மோதலுக்...
சாவின் நிழல்! - திரில் சிறுகதை
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
வெள்ளெருக்கம் பூச்சூடி உயிர்விடுத்த – பூமேனி
என்னுள்ளிருக்கும் உயிர் நாடி - உள்ளத்துள்
கள்ளிருக்கும் மலரணிந்த கூந்தலாட - என்
மனமுள்ளிருக்கும் சிறையில் புகுந்து - அவள்
அகமிருக்கும் என்னுயிரைப் பலி - கொல்லும்
ஆசையில் தவித்ததோ அவள் பூமேனி.
என்று தன் டைரியில் எழுதிய நித்யா அதை எடுத்துக் கொண்டு சத்யாவின் வீடு நோக்கி விரைந்தாள்.
பலர் குடியிருக்கும் மலர்வனக் குடியிருப்பை நெருங்கியவளைப் பொது வாயிலின் முன் நின்ற வாயில் காப்பான் மோகன் "அம்மா, இருட்டிய பிறகு யாரையும் உள்ளே விடக்கூடாது. இந்தக் குடியிருப்பின் புதுத் தாளாளர் போட்டிருக்கும் சட்டம்" என்று தலையைச் சொறிந்து கொண்டே நித்யாவை நெருங்கினான்.
மோகனிடம் எதுவும் பேச விரும்பாத நித்யா ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுக்க மௌனமாக நகர்ந்து போனான் அவன். பல வீடுகளைத் தாண்டியே தன்னுடன் பிறந்த சத்யாவின் இல்லத்தை நோக்கி விரைந்தாள் அவள்.
செல்வம் பெருகும் என யாரோ ஊடகத்தில் பரப்ப அவ்வளாகத்தில் இருக்கும் பெரும்பாலான வீடுகளின் முன் வெள்ளெருக்கு தழைத்து நின்றது. தங்கள் கைகளைப் பரப்பிக் கொண்டு மலர்களைத் தலையில் சூடிய வண்ணம் காற்றில் அசைந்து தங்கள் இருப்பைக் கணந்தோறும் அறிவித்துக் கொண்டிருந்தது.
அங்கிருந்த வீடுகளில் சற்றே உயரமான சத்யா வீட்டின் படிகளில் ஏறுவது என்பது நித்யாவிற்கு அலுப்புத் தரும் விஷயம். அதனால் கீழிருக்கும் படியில் அமர்ந்த நித்யா "சத்யா... சத்யா... நித்யா வந்திருக்கேன். முக்கியமான விஷயம் பேசணும்" என்று குரல் கொடுத்தாள்.
சத்யாவின் வீடு அமைதியாக இருக்க நித்யாவிற்குக் கோபம் அதிகரித்தது.

"வெளியே வாடி சத்யா! எனக்கு இந்தப் படியில் ஏற முடியாதுன்னு உனக்குத் தெரியும் தானே!" என்று கத்தியபடி தனது கருப்பு வண்ண டைரியை அவள் வீட்டின் வாசலை நோக்கி விட்டெரிந்தாள் நித்யா.
டைரி வாசல் கதவில் பட்டுத் தனது பக்கங்களைச் சடசடவென விரித்தவாறு காற்றில் சுழன்று படபடக்க அதன் நடுவில் இருந்து கீழே இறங்கி டைரியைக் கையில் எடுத்துக் கொண்டு கீழே வந்தாள் சத்யா. அவளுக்கு முன்னால் பாதுகாவலன் போல் பறந்து வந்தது செந்நிற ஈ.
"நான் உன்னை மறந்து இந்த இடத்தில் அமைதியாக வாழறேன் நித்யா! அர்த்த ராத்திரியில் வந்து தொந்தரவு பண்றியே? பக்கத்தில் குடியிருப்பவங்க என்னை வைய மாட்டாங்களா? நீ வந்ததும் இந்த ஈ வேறு சுத்தி இருக்கிறவங்களைப் பயமுறுத்திக்கிட்டே சுத்துது. என்ன வேணும் உனக்கு?" எரிச்சலுடன் கேட்டுக் கொண்டே தூக்கக் கலக்கத்தில் இறங்கி வந்தாள் சத்யா.
'ஈ' சத்யாவைச் சுத்திக் கொண்டே 'ஙீ.. ஙீ.. ஙீ..' என ஓசையெழுப்பியபடி தன் சிறு இறகுகளை பட.. பட.. வென அடித்தவாறு நித்யாவுக்கும் சத்யாவுக்கும் இடையில் ரேகைகளை வரைந்து கொண்டே இருந்தது.
"ஒரு நாள் நானே இந்த ஈயைக் கொலை பண்ணிடுவேன் சத்யா."
"சரி சரி. வந்த காரணத்தைச் சொல்லு."
"எனக்கு உன்னைப் பிரிஞ்சி வாழ முடியலை. வா சத்யா, நம்ம வீட்டுக்குப் போகலாம்" என்ற நித்யாவின் குரலில் இருந்த ஏதோ ஒன்று சத்யாவை யோசிக்க வைத்தது.
"சரி நித்யா, நீ தானே இங்கே என்னை விரட்டி விட்டாய். திரும்ப விரட்ட மாட்டேன்னு என்ன நிச்சயம்?" என்ற சத்யா தங்கையின் கையைத் தட்டி விட்டாள். ஈ நித்யா பேசுவதைத் தடுக்க முடியாமல் சோர்வுடன் வீட்டின் முன்னால் நின்ற வெள்ளெருக்கஞ் செடியின் மீது அமர்ந்து வேடிக்கை பார்த்தது.
"நீ மட்டும் என்னைப் பிரிஞ்சி இங்கு தனியாக இருக்கனுமா? என் கூட நீ எப்பவும் இருக்கணும் சத்யா! நீ இல்லாமல் வீடு வீடாக இல்லை சத்யா!" என்று வம்பு பண்ணிய நித்யாவுடன் வேண்டா வெறுப்பாக எழுந்து நடந்த சத்யாவின் முகத்தில் மோதியது செந்நிற ஈ. அதைப் பிடித்துத் தன் கைகளுக்குள் அடைத்த நித்யா மறு கையால் சத்யாவை இழுத்தவாறு மலர்வனக் குடியிருப்பைத் தாண்டி இடது காலை முதலில் வைத்தாள்.
அடுத்த கணம் மலர் வனத்தைச் சுற்றிலும் தீப்பிடித்து எரிந்தது. ஈ நித்யாவின் கையைத் துளைத்தவாறு வெளியேறியது. படக்கென கால்களை உள்ளே இழுத்த சத்யாவைக் குரூரமாக முறைத்தாள் நித்யா.
"எனக்கு நெருப்பு சுடலை. உனக்கு ஏன் பயம்?" என்று நித்யா கத்தவும் சத்யா தன் கையிலிருந்த கருப்பு டைரியில் முதல் வரியை வாசித்தாள்.
"வெள்ளெருக்கம் பூச்சூடி உயிர்விடுத்த - பூமேனி" என்று நித்யா எழுதியதை வாசித்த சத்யா தன்னுடன் பிறந்தவளின் முகத்தில் கோபத்தோடு அந்த டைரியை விட்டெரிந்தாள்.
"எருக்கம் பூமாலை விநாயகருக்குப் போட கோர்த்து வச்சிருக்கேன் சத்யா. வா போய் சாமி கும்பிட்டு வரலாம். மலர்வனம் என்ன கடவுளின் தோட்டமா?" என்று மீண்டும் உள்ளே நுழைய நித்யா முயற்சிக்க மோகன் சத்தம் போட்டவாறு ஓடி வந்தார்.
"இந்த நேரத்தில் யாரும் இங்கிருந்து வரமாட்டாங்க. போ... போ..." என்று மோகன் விரட்ட விருட்டென அவரை நோக்கித் திரும்பினாள் நித்யா.
நித்யாவின் கூந்தல் அவிழ்ந்து பறக்க கண்களில் நெருப்பு ஏறி எரிய ஆரம்பித்தது. நீண்ட பற்களை நெறுநெறுத்தவாறு மோகனை நெருங்கினாள். சட்டென உருமாறிய நித்யாவின் முகத் தோற்றத்தைப் பார்த்த சத்யா பயத்தில் அசையாமல் அவ்விடத்தில் நின்றாள்.
மோகன் தன் கையிலிருந்த ருத்ராட்ச மாலையைத் தன் நெற்றியில் வைத்துக் கொண்டு ஏதோ முனுமுனுக்க நித்யா தன் கையிலிருந்த கருநிற டைரியை மோகனின் முன்னால் வைத்துத் தலையைச் சாய்த்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
"ஓம் ஸ்ரீயும் கிலியும் சவ்வும் வயனமசி நமஹ" என சத்தமாக நூற்றி எட்டு முறை சொல்லி முடித்துக் கண்களைத் திறந்த மோகன் தன் கண்களை ஒட்டி நித்யாவின் கண்கள் அசையாமல் நிற்க அலறி மயங்கிச் சரிந்தார்.
தன் பக்கம் நித்யா திரும்புவதற்குள் சத்யா தன் இல்லம் நோக்கி ஓடிக் கொண்டிருந்தாள். கருநிற டைரி மேலெழுந்து சத்யாவைப் பின் தொடர்ந்தது. வீட்டுக்குள் அவள் நுழையும் முன் டைரியும் நுழைந்தது. அதன் மேல் அமர்ந்த ஈயும் சத்யாவைப் பார்த்துச் சிரித்தே சிறகை அடித்தது.
கதவைப் பூட்டிய சத்யா தன் கால்களை நீட்டியபடி சுவரில் சாய்ந்தாள். மடியில் வந்து உட்கார்ந்த கருநிற டைரி தன் பக்கங்களைப் புரட்டியது.
"என்னுள்ளிருக்கும் உயிர் நாடி - உள்ளத்துள்" என்ற இரண்டாவது வரியில் சத்யாவின் உயிர் நடுங்கித் தவித்தது. என் உயிரை நாடிய நித்யா அடுத்து என்ன செய்வாள் என்று யோசித்த சத்யாவின் உள்ளம் நடுங்கியது. பயத்தில் விழிகளைத் திறக்கப் பயந்து அவள் தூங்க ஆரம்பிக்க ஈயும் அவளின் கரத்தின் மேல் சிறகை மடித்து உட்கார்ந்து தூங்கத் தொடங்கியது.
அவள் கனவில் சிறுவயது நித்யா சிரித்தாள். சத்யாவுக்கும் நித்யாவுக்கும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே வயது வித்தியாசம்.
சத்யா மென்மை என்றால் நித்யா சரவெடியாக இருந்தாள். பார்ப்பவர்கள் நித்யாவின் சேட்டைகளை ரசித்தாலும் சத்யாவின் திறமைகளைப் பாராட்டத் தொடங்கினர்.
"சத்யா நல்ல மதிப்பெண் வாங்குறா. கலெக்டர் ஆயிடுவா."
"நித்யா நல்லா பேசுறா, பேச்சாளரா வருவா."
"அம்மாவுக்கு ஒத்தாசையாக இருக்கிறா சத்யா. நித்யா அப்பாவின் வேகத்துக்கு ஈடு கொடுக்குறா." இப்படியே இரண்டு பிள்ளைகளையும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்து பார்த்துக் கொண்டே பேசினர் உறவினர்கள்.
சத்யா பள்ளியில் அனைத்துப் பாடங்களிலும் உச்சத்தைத் தொட ஆசிரியர்கள் 'சத்யா.. சத்யா..' எனக் கொண்டாட அவளைச் சூழத் தொடங்கியது மாணவக் கூட்டம். அதன் பின் நித்யா அடிபட்ட புறாவாக ஒதுங்கத் தொடங்கினாள். படபடத்து வண்ணத்துப் பூச்சி போல் துடுக்காகப் பறந்த நித்யா இப்போது அமைதியானாள்.
அன்று நித்யாவின் உடைகளை அடுக்கி வைக்க பிள்ளைகள் அறைக்குள் நுழைந்த அம்மா அருணா வெலவெலத்துப் போனாள். நித்யாவின் நல்ல உடைகள் எல்லாம் கத்தரியால் வெட்டிக் கிடந்ததைப் பார்த்தவள் அலறிக் கொண்டே கணவனிடம் ஓட வீடு கலவரமானது.

வெட்டிய துண்டுத் துணிகள் எல்லாம் சத்யாவின் துணி அலமாரியில் பந்தாகச் சுருட்டி ஒளித்து வைக்கப்பட்டிருந்தது. பள்ளிக்கூடத்தில் இருந்து பிள்ளைகள் வரவும் அருணா சத்யாவை அடிக்க அப்பா ஞானம் சத்யாவைத் திட்டித் தீர்த்தார்.
"சத்யா, உனக்கு இப்ப ஆணவம் அதிகம் ஆயிடுச்சு. படிக்கிறது மட்டும் முக்கியம் இல்லை. உடன்பிறந்தவ உடுப்பை எல்லாம் கிழிச்சு வச்சிருக்கியே?"
"அப்பா நான் வெட்டலை ப்பா.., நிஜமாவே நான் கிழிக்கவே இல்லைப்பா" என்று முகத்தை மூடிக்கொண்டு கதறினாள் சத்யா.
"அவ உடுப்பை அவளே கிழிச்சுக்கிறதுக்கு நித்யா என்ன பைத்தியமா?" அம்மா கத்தினாள்.
"நானும் பைத்தியம் இல்லை. நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன்" என்று பதிலுக்குப் பதில் வாயாடினாள் சத்யா.
"சத்யா எனக்கு அக்கா ப்பா! அவ என் உடுப்பைக் கிழிச்சதுல எனக்கு எந்த வெறுப்புமும் இல்லை. என்னோட பாடப்புத்தகம் எல்லாம் காணாமல் போகுது. நான் பரிட்சைக்குப் படிக்கணும்னு நினைச்சுத் தேடுறப்ப அது கிடைக்க மாட்டேங்குது. பரிட்சை முடிஞ்ச மறுநாள் என் பைக்குள் புத்தகம் இருக்குது. எனக்கு இங்க என்ன நடக்குதுன்னு புரியவே இல்லை ப்பா" என்று நித்யா சொல்ல சொல்லச் சத்யாவின் கோபம் எல்லை மீறியது.
"பேசாதே! நிறுத்து நித்யா! உன் அக்கான்னு சொல்ல எனக்கு வெக்கமா இருக்குது. பள்ளிக்கூடத்துல படிக்கிறதே இல்லை. கடைசி பென்ஞ்சில் உட்கார்ந்துகிட்டு தேவையில்லாம பேசுறதும் ஆடுறதுமா பொழுதைக் கழிக்கிற."
"சரி நாளைக்கு சயின்ஸ் பரீட்சை. என் பையில் புத்தகம் இருக்குதான்னு பார்க்கிறேன்" என்ற நித்யா தன் பையில் புத்தகத்தைத் தேட அங்கு புத்தகம் இல்லை.
"பாருங்கம்மா! வழக்கமா இதுதான் நடக்குது! என் புத்தகம் எப்படிக் காணாமல் போகும்?" என அழத் தொடங்கினாள் நித்யா.
"நீ எடுத்தியா சத்யா?" என்று சொல்லிக் கொண்டே அவள் கையில் இருந்த புத்தகப் பையைப் பிடுங்கிக் கீழே தட்டினாள் அருணா. நித்யாவின் சயின்ஸ் புத்தகம் கண்களை உருட்டியவாறு கீழே விழுந்தது.
சத்யாவை ஓங்கி அறைந்தார் ஞானம். "எங்கிருந்து உனக்கு இந்தத் திருட்டுப் புத்தி வந்தது?" என்று கோபத்துடன் மகளை நெருங்கினாள் அருணா.
"அம்மா, இது எப்படி என் பைக்குள் வந்ததுன்னு எனக்கே தெரியலை!"
"உண்மை உனக்குத் தெரியாது? உனக்குத் தெரியவே தெரியாதா?" என்ற நித்யாவின் கூக்குரல் இப்போதும் காதுக்குள் கேட்க நடுங்கி எழுந்தாள் சத்தியா.
"நித்யா தான் எவ்வளவு கொடூரமாகப் போய்விட்டாள்? இப்போது எனக்கு இருக்கும் நிம்மதியையும் கெடுத்திடுவா நித்யா! வேறு வீடு பார்த்துக் கிளம்பிடனும்" என்று சுழன்றது சத்யாவின் எண்ணம்.
மலர்வனத்திற்குள் காலியாக வேறு ஏதாவது வீடு இருக்கிறதா என பார்ப்பதற்காக மெதுவாக வெளியே வந்தாள் சத்யா. தூரத்தில் அழுது கொண்டே வருவது யார் அம்மாவைப் போல இருக்குதே என்று யோசித்த சத்யா மீண்டும் வீட்டுக்குள் போய் ஒளிந்து கொண்டாள்.
'கள்ளிருக்கும் மலரணிந்த கூந்தலாட - என்
மனமுள்ளிருக்கும் சிறையில் புகுந்து - அவள்' என்ற வரிகளுடன் தன் பக்கத்தைப் புரட்டியவாறு சத்யாவின் முன் நின்றது டைரி. வெளியே அருணாவுடன் நித்யா சண்டை போடும் சத்தம் கொடூரமாகக் கேட்டது.
"அம்மா, சத்யா வீட்டை எப்படிக் கண்டு பிடிச்சு இங்க வந்த?"
"நீ அவளுக்குச் செஞ்ச கொடுமை எனக்கு மட்டும் தானே தெரியும். செத்துப் போனதால் தைரியமா வந்தேன்."
"அம்மா!" என்று ஒடி வந்து அம்மாவை அணைத்துக் கொண்டாள் சத்யா.
"அம்மா.. என்னைப் பத்தி சத்யாகிட்ட தப்பாக ஏதாச்சும் பேசின உன்னையும் கொன்னுடுவேன்."
"செத்துப் போனவளைத் திரும்பவும் எப்படிக் கொல்லுவ? சரிதான் போடி!" என்ற அருணா மகள் சத்யாவுடன் அவள் வீட்டுக்குள் நுழைந்தாள்.
"சத்யா... சத்யா... என்னோட வா. அம்மா நம்மைப் பிரிச்சுடுவாங்க" என்று படியில் தலை வைத்து முட்டி முட்டி அழ ஆரம்பித்தாள் நித்யா.

"அம்மா நித்யா என்னைத் தேடுறா! பயமா இருக்கு ம்மா!" என்று தங்கையை நோக்கி நகர்ந்த சத்யாவைத் தடுத்தாள் அருணா.
"நில்லுடி, நித்யா உன்னைக் கொலை பண்ணியதை நான் என் கண்ணால் பார்த்தேன் சத்யா."
"அம்மா."
"அவள் உடைகளை அவளே கிழிச்சதையும் அவள் புத்தகத்தை உன் பையில் வச்சு உன் மேல் எங்களை சந்தேகப்பட வைத்ததையும் பிற்பாடு நான் கண்டு பிடிச்சேன். நித்யாவின் மேல் நான் கொஞ்சம் கொஞ்சமாக சந்தேகப்பட ஆரம்பிச்சேன் சத்யா."
"என்னம்மா சொல்றீங்க?"
"வழக்கத்துக்கு மாறா அவகிட்ட ஒட்டிக்கிட்ட அமைதி, தனக்குத்தானே அவ பேசிக்கிட்டு இருந்தது, மஞ்சள் வண்ண விடிவிளக்கை எரிய விட்டு விடிய விடிய இருட்டில் அவள் தவித்தது எல்லாம் அவள் மனசு பிறழ்வு அடையத் தொடங்கியதை எனக்குப் புரிய வச்சது."
"அம்மா... நித்யாவை அப்போதே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போய் இருக்கலாமே?" என்று ரத்தக் கண்ணீர் வடிய அழத் தொடங்கினாள் சத்யா.
"டாக்டர் அவளுக்கு மருந்து கொடுத்தாங்க. உன்னையும் பத்திரமா பார்த்துக்கச் சொன்னாங்க. உன்கிட்ட சொன்னால் உனக்கும் இந்த நோய் வந்திடுமோன்னு பயந்து உன்கிட்ட சொல்லலை ராசாத்தி" என்ற அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கதறினாள் சத்யா.
"உங்க அறையில் உள்ளே இருந்து வெளியே பார்க்கிற லென்ஸை மாத்தி வெளியே இருந்து உள்ள பாக்குற மாதிரி வச்சேன். ரெண்டு பேரையும் கவனிச்சுக்கிட்டே இருந்தேன்." பேசத் தொடங்கிய அருணாவின் குரல் தழுதழுத்தது.
அன்றைய விநாயகர் சதுர்த்தி சத்யாவின் கண்களில் படமாக விரியத் தொடங்கியது.
சத்யாவும் நித்யாவும் ஒரே அறையில் உட்கார்ந்து எருக்கம் பூவை விநாயகருக்கு மாலையாக மெல்லிய கம்பியில் கோர்க்கத் தொடங்கினர். திடீரென எழுந்த நித்யா கதவின் மேல் கொண்டியைப் போட்டுவிட்டு சத்யாவை நெருங்கினாள்.
"என்ன நித்யா.. ஒரு மாதிரி பாக்குற?" சத்யா நித்யாவின் தெறித்த விழிகளைப் பயத்துடன் பார்த்தாள்.
"நீ உயிரோட இருக்கிற வரைக்கும் என்னை யாருக்கும் பிடிக்காது நீ செத்துப் போயிடு சத்யா."
"கொஞ்சம் அமைதியா இரு நித்யா. நீ ஏதோ குழப்பத்துல இருக்க. உன்னை எனக்கு ரெம்பப் பிடிக்கும் நித்யா" என்று சொல்லிக் கொண்டே எழுந்து கதவை நோக்கிப் பாய்ந்தாள் சத்யா.
"நீ சாகுற வரைக்கும் எனக்கு நிம்மதியே கிடைக்கப் போறதில்லை சத்யா! செத்துப் போயிடு. எனக்கு மட்டும் தான் அம்மா, அப்பா..." என்ற நித்யா எருக்கம் பூ மாலையை எடுத்து சத்யாவின் கழுத்தை நோக்கி வீசி தன் பக்கமாக இழுத்துச் சுற்றி இறுக்கத் தொடங்கினாள்.
பூவிற்குள் சிக்கிக் கொண்ட 'ஈ' சத்யாவிற்கு முன்னதாகத் தன் உயிரை விட்டது.
இதைக் கதவுக்கு வெளியே இருந்து லென்ஸ் வழியாகப் பார்த்த அருணா வலிப்பு வந்து கதவின் மேல் சரிந்தாள். சத்யாவை உதறிவிட்டு எழுந்த நித்யா கதவைத் திறந்து கையும் காலும் இழுத்துக் கொண்டு கிடந்த அருணாவைத் தாண்டி படிகளில் தடதடத்து இறங்கியவள் முன்னறையில் அமர்ந்து அமைதியாகத் தொலைக்காட்சிப் பெட்டியில் மூழ்கினாள்.
"அம்மாவையும் சத்யாவையும் கூப்பிடு நித்யா கோயிலுக்குக் கிளம்பலாம்" என்று நடந்ததை அறியாத அப்பா ஞானம் தன் அறைக்குள் இருந்து குரல் கொடுக்க எதுவுமே நடக்காதது போல் மாடி ஏறிச் சென்ற நித்யா 'அம்மா..., சத்யா...' என்று கதறித் துடிக்க ஆரம்பித்தாள்.
சத்யா மலர்வனத்தின் கல்லறைக்குள் குடி போக அருணா ஊமையாக அசைவில்லாமல் கட்டிலில் படுத்துக் கிடந்தாள்.
சத்யா தன்னை ஏமாற்றி விட்டுக் கல்லறைக்குள் புகுந்ததாக எண்ணி மனதளவில் சிதறிய நித்யா உண்மைக்கும் அவளது கற்பனை எண்ணத்திற்கும் இடையில் வாழத் தொடங்கினாள்.
"நித்யா வாம்மா. சத்யாவை நெனச்சு அவள் கல்லறையிலேயை தெனம் தெனம் தவம் கிடக்கிறியே கண்ணு. அம்மாவும் நம்மை விட்டுட்டுப் போயிட்டா டா. நீ தான் கொள்ளி வைக்கணும். வா.. கண்ணு." என்று மகளை அன்போடு தூக்கி நிறுத்தினார் ஞானம். அப்பாவின் குரல் கேட்டு சத்யாவின் உள்ளம் நடுங்கியது.
"அம்மா எந்திரிங்க! நாம இங்க இருந்து நித்யாவின் கண் முன்னாலே வேறு இடத்துக்குப் போயிடலாம். நாம இருக்கும் இடம் தெரியாமல் அவள் இனிமேலாவது நிம்மதியாக வாழட்டும். சாவின் நிழல் நித்யாவை விட்டு விலகட்டும்" என்று தன் வீட்டிற்குள் இருந்து அம்மாவை அழைத்துக் கொண்டு வெளியேறிய சத்யாவுடன் செந்நிற ஈயும் பறக்கத் தொடங்கியது.
"சத்யா என்னை விட்டுப் போகாதே! போகாதே! என் கூடவே நீ இருக்கணும்!" என்று கத்திய நித்யாவைத் திரும்பியும் பார்க்காமல் மலர்வனத்தை விட்டு வெளியேறினாள் சத்யா.
"அகமிருக்கும் என்னுயிரைப் பலி - கொல்லும்
ஆசையில் தவித்ததோ அவள் பூமேனி" என்றிசைத்த கருநிற டைரி நித்யாவின் கண் முன்னே அருணாவின் சிதையில் விழுந்து எரிந்து சாம்பலானது.
எழுதியவர்
கலைமதி சுப்பையா
பேரையூர்
இராமநாதபுரம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!