மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
ஒயின் பாட்டிலின் மூடியைத் திறந்ததும் வெளிவந்த பாம்பின் தலை! - மிரள வைத்த வியட்நாம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
தற்போதைய சூழலில் பெரும்பாலோர் மன அழுத்தங்களை சமாளிக்கவும் மற்றும் மன சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும் பயணங்களை மேற்கொள்கிறார்கள். பயணம் மூளையின் செயல்திறனை மேம்படுத்தி, படைப்பாற்றலை வளர்க்கிறது. வெளிநாட்டு பயண அனுபவங்கள் நம்முடைய சிந்தனைகளின் நெகிழ்வுத்தன்மையும் ஆழமும் ஒருங்கிணைந்த தன்மையும் அதிகரிக்க செய்கின்றன.
நானும் என் கணவரும் ஒரு மாறுதலுக்கு அசர்பைஜான் செல்ல திட்டமிட்டோம். ஆனால் எதிர்பாராத நிகழ்வுகளால் பயணம் ரத்தாகி விட்டது. பிறகு வியட்நாமில் உள்ள சுற்றுலா தலமான ஹோ சி மின் என்ற இடத்திற்கு ஐந்து நாள் பயணமாகச் சென்று வந்தோம்..மன நிறைவைத் தந்த இந்தப் பயணத்தை SOTC ரவி ரெட்டி மற்றும் பிரதீபா அருமையாகத் திட்டமிட்டுத் தந்தனர்.
நாங்கள் ஜூன் 14 ந் தேதி ஹைதராபாதிலிருந்து கோலாலம்பூர் சென்று அங்கிருந்து வியட்நாமில் உள்ள ஹோ சி மின் சென்றோம். E-VISA வசதி இருப்பதால் விமான நிலையத்தில் பிரச்னைகள் இருக்காது. இங்கு வந்தவுடனேயே நாங்கள் கோடீஸ்வரர்களாகி விட்டோம். ஆம். இங்கு நம் ஒரு ரூபாயின் மதிப்பு 300 வியட்நாம் ருபாய்களுக்கு ( Dong ) சமம்.

ஹோ சி மின் நகரம் முன்னர் சாய்கான் என்று அழைக்கப்பட்டது,.வியட்நாம் விடுதலை இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்த ஹோ சி மின் என்பவர் பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியில் இருந்து வியட்நாமை விடுவிக்க போராடினார். அவர் நினைவாக இந்த நகரம் ஹோ சி மின் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது வியட்நாமின் பொருளாதார இதயமாகவும், தெற்கு பிராந்தியத்தின் முக்கிய மையமாகவும் உள்ளது.
நாங்கள் முதலில் " ரீயூனிபிகேசன் அரண்மனை" (Reunification Palace) என்று அழைக்கப்படுகிற அருங்காட்சியகத்திற்கு சென்றோம்.. இது ஒரு வரலாற்று நினைவுச் சின்னமாகவும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாகவும் இருக்கிறது. 1871ஆம் ஆண்டு கவர்னர்-ஜெனரலுக்கான குடியிருப்பாக சாய்கானில் (தற்போதைய ஹோ சி மின் நகரம்) இந்த மாளிகை கட்டப்பட்டதாக வரலாறு.

1945ஆம் ஆண்டில், ஹோ சி மின் "வியட்நாம் ஜனநாயகக் குடியரசு" என அறிவித்தபோது, இந்த கட்டிடம் அதன் நிர்வாகக் கட்டுமானமாக மாற்றப்பட்டது.. பின் 1955 இல், தென் வியட்நாம் குடியரசின் தலைமை அலுவலகமாக இது மாறியது, இந்த மியூசியத்தில் போரினால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றிய காட்சிகளைப் பார்த்த போது ஜப்பான் மியூசியத்தில் ஹீரோஷிமா அணுகுண்டினால் ஏற்பட்ட விளைவுகளைப் பார்த்த போது உண்டான அதே சோகம் என்னை ஆட்கொண்டது. சுதந்திரத்திற்காக நடைபெற்ற பெரிய போராட்டம், குறிப்பாக ரசாயன ஆயுதப் போர் எவ்வளவு கொடூரமானது என்பதை உணரச் செய்கிறது.
பின் நாங்கள் பிரஞ்சு காலனித்துவக் காலத்தில் கட்டப்பட்ட சாய்கான் மத்திய தபால் நிலையத்திற்குச் சென்றோம். இந்தத் தபால் நிலையம் ஒரு தொடர்பு மையமாக மட்டுமில்லாமல், நகரத்தின் கட்டிடக் கலையும் வரலாற்றுச் சின்னமாகவும் திகழ்கிறது.
வியட்நாமின் தபால் அமைப்பை நவீனமாக்கும் நோக்குடன் பிரஞ்சு குடியேற்றக்காரர்களால் கட்டப்பட்டது.
இங்கு தற்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் தபால் நிலையத்தில் பணிபுரியும் ஊழியருடன் போட்டோ எடுத்துக் கொண்டேன். எனக்கு போஸ்டல் துறையில் பணி புரிந்த என் பழைய அனுபவம் நினைவுக்கு வந்தது.

ஹோ சி மின் நகரின் மையத்தில் அமைந்துள்ள பழமையான சாய்கான் நோட்ரே டேம் தேவாலயம், மற்றும் புத்த, சீன மத ஆலயங்களான பகோடாக்களுக்குச் சென்று வணங்கினோம் பகோடா (Pagoda) என்பது பல அடுக்குகளைக் கொண்ட கூரையுடன் அமைந்த கோபுரம் உள்ள கோயில்கள் ஆகும். இது தாய்லாந்து, கம்போடியா, நேபாளம், சீனா, ஜப்பான், கொரியா, மியான்மார், வியட்நாம் மற்றும் பிற ஆசிய பகுதிகளில் பொதுவாகக் காணப்படுகிறது. பெரும்பாலான பகோடாக்கள் மதநோக்குடன் பெரும்பாலும் புத்தமத அடிப்படையில்,கட்டப்பட்டவை.
ஜேட் எம்பெரர் பகோடா (Jade Emperor Pagoda) ஹோ சி மின் நகரத்திற்கு பயணம் செய்யும் போது தவறவிடக்கூடாத இடமாகும். ஆன்மிகம் மட்டுமன்றி, இந்த பகோடா பண்டைய சீனக் கட்டிடக் கலை அழகையும் கொண்டுள்ளது.
ஜேட் எம்பெரர் வியட்நாம் புராணங்களில் மிகவும் முக்கியமான மற்றும் பிரபலமான கடவுள்களில் ஒருவர். இங்குள்ள மக்கள் காதல் வெற்றி பெறவும், குழந்தைச் செல்வத்திற்காகவும் விளக்கேற்றி இக்கோயிலில் வழிபடுகிறார்கள்.
மேலும் இங்குள்ள பழமையான நொக் ஹோங் கோயிலின் வளாகத்தில் ஒரு வயதான மூதாட்டி ஒரு பெண்ணின் முன் அமர்ந்து தீய சக்திகளை விரட்டும் மந்திரங்களை உச்சரித்தபடி மந்திரிப்பதைப் பார்க்க வியப்பாக இருந்தது.

ஒரு மாலை வேளையில் பக் டாங் துறைமுகம் ( Bach Dang) சென்றோம். ஹோ சி மின் நகரத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மற்றும் பரபரப்பான நதிக்கரை பகுதியாகும்.
இது சாய்கான் நதிக்கரையில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலா இடமாகும் இங்கு river bus இல் ஏறி நகரத்தின் வானுயர்ந்த கட்டிடங்கள், வணிக வளாகங்கள் என நகரின் பல இடங்களைச் சுற்றி வந்தோம்.
கடைசி நாளன்று மீகாங் டெல்டா என்ற இடத்திற்கு சென்றது திகில் பயணமாக இருந்தது.. மீகாங் டெல்டா ஆசியாவிலும் உலகிலுமே மிகப்பெரிய மற்றும் வளமான ஒன்றாகும். இது சுமார் நான்கு மில்லியன் ஹெக்டேர்களாக விரிந்திருப்பதுடன், 18 மில்லியன் மக்களின் வாழ்க்கையை விவசாயம் மற்றும் நீர்வள வளர்ப்பின் மூலம் ஆதரிக்கிறது.
மீகாங் டெல்டா ஹோ சி மின் நகரத்திலிருந்து இரண்டு மணி நேர கார் பயணம். பின் அங்கிருந்து படகில் அழைத்துச் செல்கிறார்கள். படகில் ஏறியவடன் எங்கள் கைடு ஆற்று நீரில் கை வைக்காதீர்கள். இங்கு முதலைகள் அதிகம்’ என பயமுறுத்தினார்.
அரை மணி நேரத்தில் ஒரு அழகான மிகவும் அறியப்படாத கிராமத்தை வந்தடைந்தோம். தென்னை மரங்கள் சூழ எங்கும் பசுமையாக மனதைக் கொள்ளை கொண்டது. மழைக் காலமாதலால் லேசான தூறல்.
ரம்யமாக இருந்தது. உள்ளே சுற்றி வர குதிரை வண்டி, பேட்டரி கார் வசதிகள் உண்டு. முதலில் தேங்காய் பால் சேர்த்து தயாரிக்கப்படும் மிட்டாய் தொழிற்சாலைக்குச் சென்று மிட்டாய்களைச் சுவைத்தோம் ( free ஆகத்தான ). பின் தேனைப் பயன்படுத்தி தயாரித்த உணவுகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களைப் பார்த்தோம்.

அடுத்ததாக எங்களை வியட்நாமின் பாரம்பரிய பாடல்கள், நடனங்கள் என கலை நிகழ்ச்சிகள் நடக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அருமையாக இருந்தது. வெளியே வந்தபோது ஒரு இடத்தில் பெரிய பாட்டில்களில் உள்ள திரவங்களில் உள்ளே பாம்புகள், பெரிய தேள்கள் போன்ற விஷ ஜந்துக்களை அடைத்து விற்பனைக்கு வைத்திருந்ததைப் பார்த்து திடுக்கிட்டேன்..
Snake Wine என்று சொன்ன எங்கள் கைடு ஒரு பாட்டிலின் மூடியைத் திறக்க பாம்பின் தலை வெளியே வருவதைப் பார்த்து அலறினேன். மேலும் சிறிது துரத்தில் ஒருவர் மலைபாம்பை கைகளில் வைத்துக் கொண்டு நம் கழுத்தில் போட வருகிறார். ஆளை விடுடா சாமி என அங்கிருந்து நகர்ந்தேன்..
பின் அங்கிருந்த பசுமையான நெல் வயல்கள், பலா,மா,டிராகன் பழத் தோட்டங்கள், காய்கறித் தோட்டங்கள் என சுற்றி விட்டு அந்த கிராம சூழ்நிலையில் பரிமாறப்பட்ட இயற்கை உணவுகளை சுவைத்து மகிழ்ந்தோம். வியட்நாம் டிராகன் பழ உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.
குறைந்த பட்ஜெட்டில் பயணம் செய்ய உகந்த இடம் ஹோ சி மின் நகரம் . வியட்நாமின் உணவுத் தலைநகரம் என்று இது அழைக்கப்படுகிறது ஹோ சி மின் நகரில் பல்வேறு உயர்ரக ஹோட்டல்கள், சர்வதேச உணவகங்கள் மற்றும் ஷாப்பிங் வசதிகள் உள்ளன, இங்கு நான்கு கடைகளில் ஒரு கடை காபி ஷாப்பாக இருக்கிறது. கோகனட் காபி, எக் காபி, வியட்நாம் காபி என பல வகை காபி கிடைக்கிறது. நம் மனமும் உடலும் புத்துணர்வு பெற சில நாள்கள் ஹோ சி மின்னில் இருந்து விட்டு வரலாம். ’
-வி. ரத்தினா
ஹைதராபாத்
