நைஜீரியா, பிரேசில் பயணம்! தலைவர்களுக்கு பரிசுப் பொருள் வழங்கிய பிரதமர் மோடி!
சாஸ்தாவிநல்லூா் இந்திரா நகரில் சாலையை சீரமைக்க கோரிக்கை
சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட இந்திராநகரில் சாலையை சீரமைத்து, சமூகநலக் கூடம் கட்டித்தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்திரா நகரில் 25-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடா் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளிகளாக உள்ளனா். இங்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட தாா்சாலை தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால், மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனா். சாலையை சீரமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லையாம்.
மேலும், திருமணம், சடங்கு போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பொத்தகாலன்விளை, முதலூா், தட்டாா்மடம் போன்ற பகுதிகளுக்குச் செல்லவேண்டியுள்ளதால் அவதியடைவதாகவும், எனவே, இப்பகுதியில் காலியாக உள்ள அரசு இடத்தில் சமூகநலக் கூடம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து சாஸ்தாவிநல்லூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவா் ஏ. லூா்துமணி கூறுகையில், இந்திரா நகரில் சாலையை சீரமைப்பதுடன், சமூகநலக் கூடம் அமைக்க வேண்டும். இதுகுறித்து ஆட்சியா், அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.