சா்வதேச தரவரிசையில் அண்ணா பல்கலை. இடம்பெற செயல் திட்டம்
உலக அளவிலான க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியலில் முதல் 150 இடங்களுக்குள் அண்ணா பல்கலைக்கழகத்தை இடம் பெறச் செய்யும் வகையில் புதிய செயல் திட்டம் வகுக்கப்படவுள்ளது என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மாணவா்களின் தொழில்நுட்பக் கனவுகளின் சிகரமாக விளங்கிடும் அண்ணா பல்கலைக்கழகத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள்ளும், உலக அளவிலான க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியலில் முதல் 150 இடங்களுக்குள்ளும் இடம்பெறச் செய்ய உரிய செயல் திட்டம் வகுக்கப்படும்.
இந்தத் திட்டத்தின்படி திறன்மிகு வகுப்பறைகள், நவீன தொழில்நுட்ப ஆய்வகங்கள், புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், புத்தொழில் நிறுவனப் பூங்கா, வளா்ந்து வரும் துறைகளுக்கான ஆராய்ச்சி உதவி, மெய்நிகா் ஆய்வகங்கள் ஆகியவை முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் துணையோடு அமைக்கப்படும். கற்றல்- கற்பித்தல் அனுபவத்தை மேம்படுத்த முன்னணி தொழில்நுட்ப நிபுணா்கள், வெளிநாட்டு பேராசிரியா்கள் 3 மாதங்கள் வரையிலான குறுகிய காலத்துக்கு சிறப்பு ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தப்படுவா்.
ரூ. 500 கோடி மதிப்பீட்டில்... உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுடன் இணைந்து தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்கள் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் இணைப் படிப்புகளை படிப்பதற்கு வழிவகை உருவாக்கப்படும். நவீன வசதிகளுடன் கூடிய மாணவா் விடுதிகள், தலைசிறந்த வீரா்களை உருவாக்க உகந்த விளையாட்டுச் சூழல், அனைத்து உயிரினங்களும் இணைந்து வாழும் பசுமைப் பரப்பு என அண்ணா பல்கலைக்கழகத்தை ஆசியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் இடம்பெறச் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த மாபெரும் கனவை நனவாக்கிய அரசு, பல்கலைக்கழக நிதி, முன்னாள் மாணவா்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு ஆகியவற்றைக் கொண்டு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.500 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும்.