சித்திரை தேர்த்திருவிழா: ஸ்ரீரங்கத்தில் முகூர்த்தக்கால் நடும் வைபவம்!
ஸ்ரீரங்கம் சித்திரை தேர்த் திருவிழாவை முன்னிட்டு திருத்தேரில் மேளதாளம் முழங்க முகூர்த்தக்கால் நடும் வைபவம் நடைபெற்றது.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை தேர்த் திருவிழா வருகின்ற ஏப்ரல் 26-ம் தேதி அன்று நடைபெறுகிறது.
வரும் 18-ம் தேதி அதிகாலை மேஷ லக்னத்தில் கொடியேற்றம் தொடங்கி அன்று முதல் சித்திரை தேர்த் திருவிழா உற்சவம் ஏப்ரல் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. உற்சவ நாள்களில் நம்பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். இந்த உற்சவத்திற்காக சித்திரை வீதியில் உள்ள சித்திரை தேரில் முகூர்த்தக்கால் நடும் வைபவம் இன்று நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் கோயில் பட்டாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்கப் பூஜைகள் செய்து தேரின் மீது முகூர்த்தக்கால் நட்டனர். இந்த நிகழ்வில் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் சிவராம் குமார் திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர். திருத்தேர் முன்பாக முகூர்த்தக்காலுக்குக் கோயில் யானை ஆண்டாள் மற்றும் லட்சுமி மரியாதை செய்தது.
சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளாக சித்திரைத் திருவிழாவின் 26ஆம் தேதி அன்று காலை 5.15 மணியளவில் திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இந்த நிலையில் சித்திரைத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.