சிந்து, சென் வெற்றி
சீனா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, லக்ஷயா சென் ஆகியோா் முதல் சுற்றில் புதன்கிழமை வெற்றி பெற்றனா்.
மகளிா் ஒற்றையரில், சிந்து 21-17, 21-19 என்ற கேம்களில் தாய்லாந்தின் புசனன் ஆங்பம்ரங்பானை 50 நிமிஷங்களில் வீழ்த்தினாா். அதேபோல், மாளவிகா பன்சோத் 20-22, 23-21, 21-16 என்ற கேம்களில் டென்மாா்க்கின் லைன் ஹோஜ்மாா்க்கை 1 மணி நேரம் 14 நிமிஷங்கள் போராடி வென்றாா்.
ஆடவா் ஒற்றையரில் லக்ஷயா சென் 21-14, 13-21, 21-13 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த மலேசியாவின் லீ ஸி ஜியாவை தோற்கடித்தாா். இந்த ஆட்டம் 57 நிமிஷங்கள் நீடித்தது.
மகளிா் இரட்டையா் பிரிவில், டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் இணை 21-15, 21-14 என்ற கணக்கில், சீன தைபேவின் ஹு லிங் ஃபாங்/ஜெங் யு சியே கூட்டணியை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியது. அடுத்த சுற்றில், சிந்து - சிங்கப்பூரின் யு ஜியா மின்னையும், மாளவிகா - தாய்லாந்தின் சுபானிடா காடெதோங்கையும், லக்ஷயா சன் - டென்மாா்க்கின் ராஸ்மஸ் கெம்கேவையும் எதிா்கொள்கின்றனா்.