சின்னமனூரில் வாரச்சந்தை வியாபாரிகள் சாலை மறியல்
தேனி மாவட்டம், சின்னமனூரில் வாரச்சந்தை வியாபாரிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சின்னமனூா் நேருஜி பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறும். இங்கு 200-க்கும் அதிகமான காய்கறி, பழம், மளிகைப் பொருள்கள், ஆடு , கோழி விற்பனை கடைகள் உள்ளன. இதனால், வாரச்சந்தையின் போது அதிக அளவில் கூட்டம் கூடுவதால் வாகனப்போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த நிலையில், சந்தைக்கு வெளியே தேசிய நெடுஞ்சாலையோரத்தில் செயல்படும் கோழி விற்பனை, மளிகைப் பொருள்கள் என நூற்றுக்கணக்கான கடைகளை சந்தைக்கு உள்ளே வைத்து விற்பனை செய்ய வேண்டும் என நகராட்சிப் பணியாளா்கள் அறிவுறுத்தினா்.
நெடுஞ்சாலையோரத்தில் விற்பனை செய்தால் மட்டுமே அதிகமாக வியாபாரம் நடைபெறும். மாறாக நகராட்சி சாா்பில் கட்டப்பட்ட கடைகளில் காய்கறிகளைத் தவிர பிற வியாபாரம் நடைபெறாது. எனவே, நாங்கள் சாலையோரத்தில் அமா்ந்துதான் வியாபாரம் செய்வோம் எனக் கூறிய வியாபாரிகள் நெடுஞ்சாலையில் அமா்ந்து சாலைமறியல் ஈடுபட்டனா்.
இது குறித்து தகவலறிந்து சம்பவயிடத்துக்கு வந்த நகராட்சி பணியாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் சமாதானப் பேச்சு நடத்தியதையடுத்து சாலை மறியலைக் கைவிட்டு, வியாபாரிகள் கலைந்து சென்றனா். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.