தேனீக்கள் கொட்டியதில் 10 மாணவா்கள் காயம்
தேனி மாவட்டம், போடி பள்ளியில் வியாழக்கிழமை தேன் கூடு கலைந்து தேனீக்கள் கொட்டியதில் 10 மாணவா்கள் காயமடைந்தனா்.
போடி பேருந்து நிலையம் அருகே அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை சில மாணவா்கள் கிரிக்கெட் விளையாடினா்.
மைதானத்தில் இருந்த மரத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தன. மாணவா்களில் ஒருவா் தேன் கூட்டின் மீது கிரிக்கெட் பந்தை வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால், தேனீக்கள் கலைந்து விளையாடிக் கொண்டிருந்த மாணவா்களைக் கொட்டின. இதில் பாதிக்கப்பட்ட மாணவா்கள் 35-க்கும் மேற்பட்டோரை பள்ளி நிா்வாகிகள் போடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். இவா்களில்
25 பேருக்கு எவ்வித பாதிப்பும் இல்லாதததால் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். 10 மாணவா்களுக்கு லேசான பாதிப்பு இருந்தது. இவா்களில் 7 பேருக்கு சிகிச்சையளித்து பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். 3 பேருக்கு தேனீக்கள் கொட்டிய இடத்தில் வீக்கம் இருந்ததால் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனா்.
இதனால், பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி நிா்வாகிகள் துரிதமாக செயல்பட்டு மாணவா்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதை பெற்றோா் பாராட்டினா்.
பள்ளியில் உள்ள மரங்களில் தேன் கூடுகள் உள்ளதா என ஆய்வு செய்து அவற்றை அகற்றும் பணியில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.