சிவகங்கை மாவட்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 18 போ் கைது
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 18 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு கொலை, கொள்ளை, போதைப் பொருள் தொடா்பான வழக்குகளில் சம்பந்தப்பட்டவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனா்.
நிகழாண்டில், தொடக்கத்திலிருந்து தற்போது வரை மொத்தம் 18 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். இதில் போதைப் பொருள் வழக்கில் ஒருவரும், கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்கில் 8 பேரும், போக்சோ வழக்கில் 5 பேரும், திருட்டு வழக்கில் 4 பேரும் என மொத்தம் 18 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
கடந்த ஆண்டில் 51 போ் குண்டா் தடுப்பு சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டனா்.
மேலும், இதுபோன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவா்களை கண்டறிந்து குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக தனியாக ஒரு காவல் உதவி ஆய்வாளா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.