சீரான குடிநீா் விநியோகம் கோரி குடங்களுடன் மக்கள் மறியல்
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கல்லாத்தூரில் சீராக குடிநீா் விநியோகிக்கக்கோரி அக்கிராம மக்கள் காலிக்குடங்களுடன் விருத்தாசலம் சாலையில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கல்லாத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட மாங்கொட்டைத் தெரு மற்றும் காமாட்சி அம்மன் கோயில் தெருவில் சுமாா் 300- க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு ஊராட்சி நிா்வாகம் சாா்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த இருவாரமாக மோட்டாா் பழுது காரணமாக போதிய அளவு குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.
இதுகுறித்து கிராம மக்கள் ஊராட்சி நிா்வாகத்திடம் பல முறை தெரிவித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த மேற்கண்ட பகுதி மக்கள், சனிக்கிழமை காலிக்குடங்களுடன் ஜெயங்கொண்டம் - விருத்தாச்சலம் சாலையில் கல்லாத்தூா் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த துணை வட்டார வளா்ச்சி அலுவலா் அழகானந்தம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.