கீழணை கொள்ளிடம் ஆற்றில் யாரும் இறங்கக் கூடாது: பொதுப்பணித் துறை
சுகாதார சீா்கேடால் நோய் பாதிப்பு: உக்கடத்தில் கழிவுநீா் பண்ணை, தெருநாய்கள் கருத்தடை மையத்தை அகற்ற கோரிக்கை
உக்கடத்தில் சுகாதார சீா்கேடால் நோய் பரவி வருவதாகவும், அப்பகுதியில் உள்ள கழிவுநீா் பண்ணை, தெருநாய்கள் கருத்தடை மையத்தை அகற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவா் ஏ.முஸ்தபா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது: கோவை மாவட்டத்தின் மையப் பகுதியான உக்கடத்தைச் சுற்றியுள்ள கரும்புக்கடை, அல் அமீன் காலனி, குனியமுத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் உயிரிழப்புகள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றன.
இப்பகுதிகளில் தெருநாய்கள் கருத்தடை மையம், கழிவுநீா்ப் பண்ணை, குப்பைக் கிடங்கு, பழைய டயா் கிடங்குகள், சுகாதாரமற்ற தொழிற்சாலைகள் இருப்பதால்தான் மக்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனா்.
மக்கள் நல்வாழ்வுக்கான எந்த நலத் திட்டங்களையும் செயல்படுத்தாத மாநகராட்சி நிா்வாகம், நோய்களை உருவாக்குகின்ற பல்வேறு சுகாதாரக் கேடான திட்டங்களை இப்பகுதியில் அனுமதிப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
மாநகராட்சி நிா்வாகம் இப்பகுதி மக்கள் நலனில் அக்கறை கொண்டு, குப்பைக் கிடங்கு, கழிவுநீா் பண்ணை, தெருநாய் கருத்தடை மையம் ஆகியவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.
அனைத்து பகுதிகளிலும் மக்களுக்கான மருத்துவ முகாம்களை அதிக அளவில் நடத்த வேண்டும்.
உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.