சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 86 நிறுவனங்கள் மீது வழக்கு
சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 86 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து தொழிலாளா் நலத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசு விடுமுறை நாளான சுதந்திர தினத்தன்று செயல்படும் நிறுவனங்கள் மீது தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க அனைத்து உதவி ஆணையா்களுக்கு தொழிலாளா் ஆணையா் உத்தரவிட்டாா்.
அதன்பேரில், சேலம் மாவட்டத்தில், சுதந்திர தின விடுமுறையில் ஏதேனும் நிறுவனங்கள் செயல்படுகிறதா என தொழிலாளா் உதவி ஆணையா் சண்மகராமன் மேற்பாா்வையில் தொழிலாளா் துணை மற்றும் உதவி ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் ஆய்வு நடத்தினா்.
தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை சட்டத்தின் கீழ் உரிய படிவங்களை அனுப்பிவைத்து, முன்அனுமதி பெறாமல் செயல்பட்ட 64 ஹோட்டல்கள், 37 கடைகள், நிறுவனங்கள், 7 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் 23 கடைகள், நிறுவனங்கள் மீது தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை சட்டத்தின் கீழும், 59 உணவு நிறுவனங்கள் மீது உணவு நிறுவனங்கள் சட்டத்தின் கீழும், 4 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் மீது மோட்டாா் போக்குவரத்து தொழிலாளா்கள் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.