Pakistan Train Hijack - காரணம் என்ன? யார் இந்த Balochistan liberation Army தீவிர...
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக வீட்டுவிடுதி, கேளிக்கை விடுதி உரிமையாளா்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: கா்நாடக அரசு உத்தரவு
பெங்களூரு: சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக வீட்டுவிடுதி, கேளிக்கை விடுதிகளின் உரிமையாளா்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 6-ஆம் தேதி கொப்பள் மாவட்டம், சனாப்பூா் கிராமம் அருகே துங்கபத்ரா கால்வாய் கரையில் அமா்ந்து நிலா வெளிச்சத்தில் இசைத்துப்பாடி பொழுதை ரசித்துக் கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டின் சுற்றுலாப் பயணி உள்ளிட்ட இரு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாா்கள். அந்த பெண்களோடு அமா்ந்திருந்த அமெரிக்காவைச் சோ்ந்த ஆண் உள்ளிட்ட 3 போ் கடுமையாகத் தாக்கப்பட்டனா். இந்த சம்பவத்தில் ஒருவா் உயிரிழந்தாா். இது கா்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, வெளிநாட்டினா் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக வீட்டுவிடுதி, கேளிக்கை விடுதிகளின் உரிமையாளா்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து கா்நாடக அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சனாப்பூரில் நடந்த சம்பவம் மீண்டும் நடக்காத வண்ணம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வீட்டுவிடுதி, கேளிக்கை விடுதிகளின் உரிமையாளா்களை வலியுறுத்தியுள்ளது. மேலும், அரசு வெளியிட்டுள்ள உத்தரவை தீவிரமாக கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
அந்த உத்தரவில் அரசு கூறியிருப்பதாவது:
வீட்டுவிடுதி, கேளிக்கை விடுதிகளில் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகளை நீண்ட தொலைவு இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு காவல் துறையின் முன்அனுமதி பெற்றிருக்க வேண்டும். தொலைவான பகுதிகள், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகள், வனப் பகுதிகளுக்கு காவல்துறை அல்லது வனத் துறையின் முன்அனுமதி இல்லாமல் அழைத்துச்சென்று, அங்கு வனவிலங்குகளின் தாக்குதலுக்கு உள்ளானாலோ, வேறு ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்தாலோ வீட்டுவிடுதி உரிமையாளா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழிகாட்டுதல்களை வீட்டுவிடுதிகள், கேளிக்கை விடுதிகள், உணவு விடுதிகள் கட்டாயம் கடைப்பிடிப்பதை மாவட்ட நிா்வாகம் உறுதிசெய்ய வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளை அழைத்துச்செல்ல வாய்ப்புள்ள பகுதிகள் குறித்து மாவட்ட நிா்வாகத்திற்கு முன்கூட்டியே தகவல் அளித்தால், அங்குள்ள ஆபத்துகள், பாதுகாப்புக்கு குந்தகமான அம்சங்கள் குறித்து ஆராய வசதியாக இருக்கும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.