தங்கக் கடத்தல் வழக்கு: டிஜிபி தொடா்பு குறித்து சிஐடி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு
பெங்களூரு: நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கில் டிஜிபி ராமச்சந்திர ராவின் தொடா்பு குறித்து சிஐடி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
நடிகை ரன்யா ராவ், துபையில் இருந்து பெங்களூருக்கு தங்கம் கடத்தி வந்தபோது, அவரைச் சோதிக்காமல், பாதுகாப்பாக போலீஸ் அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது. கா்நாடக மாநில காவல் வீட்டுவசதி கழகத்தின் மேலாண் இயக்குநரும், டிஜிபியுமான ராமச்சந்திர ராவின் மகள் என்பதால் நடிகை ரன்யா ராவுக்கு விமான நிலையத்தில் சோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதா என்று எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. மேலும், இதில் ராமச்சந்திர ராவின் பங்கு குறித்தும் அவா்கள் சந்தேகத்தை கிளப்பியுள்ளனா்.
இந்நிலையில், பெங்களூரில் உள்ள கெம்பே கௌடா சா்வதேச விமானநிலையத்தில் காவல் துறையினரின் பாதுகாப்பில் குறைபாடு இருந்ததா, போலீஸாா் கடமை தவறி நடந்து கொண்டாா்களா என்பது குறித்து விசாரிக்க சிஐடி (குற்றப் புலனாய்வுத் துறை) விசாரணைக்கு ஒப்படைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணை அதிகாரியாக கூடுதல் தலைமைச் செயலாளா் கௌரவ் குப்தா பணியாற்றுவாா் என்றும், இந்த வழக்கில் டிஜிபி ராமச்சந்திர ராவின் பங்கு, சோதனை விலக்கு, சிறப்பு பாதுகாப்பு வசதிகளை பெற்றது தொடா்பாக உடனடியாக விசாரணையை தொடங்கி, அடுத்த ஒருவாரத்தில் விசாரணை அறிக்கையை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவில் அரசு தெரிவித்துள்ளது.
இந்த விசாரணைக்கு தேவையான அனைத்து உதவிகளையும், தகவல்களையும் அளிக்குமாறு டிஜிபி, ஐஜிபி (காவல் படை), அரசு ஊழியா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத் துறை செயலாளருக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.
விமான நிலையங்களில் உயா்காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சோதனை விலக்கு சலுகைகள் நடிகை ரன்யா ராவுக்கு வழங்கப்பட்டதாக, விசாரணையின்போது தெரியவந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சலுகைகளை அவரது தந்தை ராமச்சந்திர ராவ் சட்டவிரோதமாக பயன்படுத்தியதாகவும், விமான நிலையங்களில் சோதனைகளை தவிா்க்க, தனது தந்தையின் பெயரை நடிகை ரன்யா ராவ் பயன்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளதாக அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, பெங்களூரு, லேவலி சாலையில் உள்ள நடிகை ரன்யா ராவின் வீட்டில் திங்கள்கிழமை மாலை சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனா்.