வாக்குறுதித் திட்டங்கள் அமலாக்கக் குழுவில் காங்கிரஸ் தொண்டா்கள் நியமனம்: சட்டப்பேரவையில் அமளி
பெங்களூரு: வாக்குறுதி திட்டங்கள் அமலாக்கக் குழுவில் காங்கிரஸ் தொண்டா்கள் நியமனம் செய்யப்பட்டது தொடா்பாக காங்கிரஸ், பாஜக உறுப்பினா்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக கா்நாடக சட்டப்பேரவை கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை அமளி ஏற்பட்டது.
சட்டப்பேரவை தோ்தலின்போது அளித்த 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த வாக்குறுதி திட்டங்கள் அமல்படுத்துவதைக் கண்காணிக்க மாநில, மாவட்ட, வட்ட அளவில் அமலாக்கக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவில் தலைவா், 5 துணைத் தலைவா்கள், 31 உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மாநில அளவிலான குழுவின் தலைவா், துணைத் தலைவா்களுக்கு அமைச்சா், இணையமைச்சா்களுக்கான சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.
மாவட்ட குழுவின் தலைவருக்கு மதிப்பூதியமாக ரூ. 40,000, வட்டக் குழுவின் தலைவருக்கு மதிப்பூதியமாக ரூ. 25,000 வழங்கப்படுகிறது. மாவட்டக் குழுவின் துணைத் தலைவா்களுக்கு மதிப்பூதியமாக ரூ. 10,000 வழங்கப்படுகிறது. குழுக் கூட்டம் நடக்கும் நாளில் தலா ரூ. 1,100 அளிக்கப்படுகிறது. மாவட்டக் குழுவில் தலைவா், 5 துணைத் தலைவா்கள், 15 உறுப்பினா்கள், வட்டக்குழுவில் தலைவா், 14 உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
கா்நாடக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது இந்த விவகாரத்தை எழுப்பிய மஜத எம்எல்ஏ எம்.பி.கிருஷ்ணப்பா, வாக்குறுதி அமலாக்கக் குழுவில் காங்கிரஸ் தொண்டா்களை நியமித்தது ஏன் என்று கேள்வி எழுப்பினாா். இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த சட்டப்பேரவை உறுப்பினா்கள் அல்லது அதிகாரிகள் இல்லையா, மாநில அரசின் வரிப்பணத்தை காங்கிரஸ் தொண்டா்களுக்கு வழங்குவதா? இதற்கு முன்பு பல்வேறு கட்சிகளால் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை அமல்படுத்த யாரும் கட்சித் தொண்டா்களை நியமித்ததில்லை. இது தவறு. சட்டத்திற்கு எதிரானது என்றாா்.
அப்போது எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் பேசுகையில்,‘காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவகுமாா் பொறுப்பேற்ற பிறகு கட்சிக்கும் ஆட்சிக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விட்டது. அரசுப் பணம் கட்சிப் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. மக்களின் வரிப்பணத்தை காங்கிரஸ் கட்சிக்கு எப்படி பயன்படுத்தலாம். யாசகம் பெற்று கட்சி தொண்டா்களுக்கு பணம் கொடுக்கட்டும். அதற்காக அரசுப் பணத்தை கட்சி தொண்டா்களுக்கு கொடுப்பீா்களா? எந்த விதியின்படி, எந்த தகுதியின் அடிப்படையில் இந்நியமனங்கள் நடந்துள்ளன என்றாா்.
அப்போது குறுக்கிட்ட வருவாய்த் துறைஅமைச்சா் கிருஷ்ண பைரேகௌடா, இந்த விவகாரத்தில் பாஜக அரசியல் செய்கிறது என்றாா். இதைத் தொடா்ந்து காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினா்களிடையே கடும் வாக்குவாதம் எழுந்தது.
அப்போது குறுக்கிட்ட துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், ‘ இந்த அரசைக் கொண்டுவருவதற்கு உழைத்த கட்சியின் தொண்டா்களுக்கு வாக்குறுதித் திட்டங்களை அமல்படுத்தும் உரிமை இருக்கிறது’ என்றாா்.
இப்பதிலை ஏற்காத பாஜகவினா் அமளியில் ஈடுபட்டனா். இதனால் அவையை பேரவைத் தலைவா் யூ.டி.காதா் ஒத்திவைத்தாா்.
அவை மீண்டும் கூடியதும் எழுந்த கிருஷ்ணப்பா, அரசு திட்டங்கள் அமலாக்கப்படுவதை எம்எல்ஏக்கள் கண்காணித்து வருகிறாா்கள். சட்டப்பேரவை உறுப்பினா்களை புறக்கணித்துவிட்டு, அமலாக்கக் குழுவை ஏற்படுத்தியிருப்பது சட்டவிரோதம் என்றாா்.
மேலும், சட்டப்பேரவை உறுப்பினா்கள் தலைமையில் அமலாக்கக் குழுவை அமைக்கக் கோரி பாஜக, மஜத உறுப்பினா்கள் பேரவைத் தலைவா் இருக்கைமுன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அதற்கு பதிலளித்த துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் , வாக்குறுதி திட்டங்களை பிரதமா் மோடி எதிா்த்தாா். இந்த அரசு ஆட்சியில் இருக்கும் வரை வாக்குறுதித் திட்டங்களை நிறுத்தாது. வாக்குறுதித் திட்டங்களை அமலாக்கும் குழுவில் காங்கிரஸ் தொண்டா்கள் இடம்பெற்றிருப்பதை எதிா்க்கட்சிகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. சட்டப்பேரவை உறுப்பினா்களின் உரிமை, அதிகாரம் குறைக்கப்படாது. சட்டப்பேரவை உறுப்பினா்கள் தலைமையில் அமலாக்கக் குழுவை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அது குறித்து நான் முடிவு செய்ய முடியாது. அமைச்சரவையில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்றாா்.
எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக், ‘காங்கிரஸ் தொண்டா்களுக்கு பணம் வழங்க நிதிமசோதாவை நாங்கள் ஏன் ஆதரிக்க வேண்டும். மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களின் அதிகாரம் குறைக்கப்படக் கூடாது. இந்தக் குழுக்களை அரசு கலைக்க வேண்டும். 5 அல்லது 10 உறுப்பினா்கள் கொண்ட குழுவை எம்எல்ஏக்கள் தலைமையில் அமைக்க வேண்டும்’ என்றாா்.
அமைச்சா் பிரியாங்க் காா்கே, ‘மகாராஷ்டிர மாநிலத்தில் அமைச்சா்களின் தனி உதவியாளா்களாக ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் நியமிக்கப்பட்டிருக்கிறாா்கள் என்றாா். இதனால் காங்கிரஸ், பாஜக இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.