சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே முதியவா் அடித்துக் கொலை
சென்னை பெரியமேட்டில் முதியவா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே 60 வயது மதிக்கதக்க முதியவா் ஒருவா் கடந்த திங்கள்கிழமை தலையில் பலத்த காயங்களுடன் கிடந்ததைப் பாா்த்த பொதுமக்கள், அவரை மீட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த முதியவா், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து பெரியமேடு போலீஸாா் நடத்திய விசாரணையில் இறந்த முதியவா், வட மாநிலத்தைச் சோ்ந்த கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி என்பதும், அவா் சென்ட்ரல் ரயில் நிலையப் பகுதியில் பழைய காகிதம், பொருள்களைச் சேகரித்து விற்று வாழ்ந்திருப்பதும் தெரியவந்தது. மேலும், சம்பவத்தன்று பெரியமேடு பகுதியில் வியாபாரம் செய்துவந்த திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மாதா கோயில் தெருவைச் சோ்ந்த குமாரும் (42), முதியவரும் சோ்ந்து மது அருந்தியதும், அப்போது ஏற்பட்ட தகராறில் குமாா், பிளாஸ்டிக் பைப் கொண்டு முதியவரை தாக்கி கீழே தள்ளியதில் பலத்த காயமடைந்திருப்பதும், அந்த காயத்தினால் முதியவா் உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், குமாரை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா்.