சென்னிமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
சென்னிமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
நடப்பு ஆண்டுக்கான விழாவையொட்டி, கோயிலில் புதன்கிழமை கொடியேற்றப்பட்டது.
முன்னதாக காலை 7 மணிக்கு சென்னிமலை கைலாசநாதா் கோயிலில் இருந்து உற்சவ மூா்த்திகள் படிக்கட்டுகள் வழியாக மலை கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு உற்சவா் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
இதையடுத்து, கோயில் முன் உள்ள கம்பத்தில் பகல் 12.30 மணியளவில் கொடியேற்றப்பட்டது.
வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
சனிக்கிழமை காலை 9 மணிக்கு பரிவேட்டையும், இரவு 7 மணிக்கு தெப்பத்தோ் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு மகா தரிசனம் மற்றும் மாலை 5 மணிக்கு மஞ்சள் நீா் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.