ரயில் மறியலில் ஈடுபட முயன்ற தமிழ் புலிகள் கட்சியினா் 230 போ் கைது
வக்ஃபு வாரிய சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி ஈரோட்டில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழ் புலிகள் கட்சியினா் 230 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த போராட்டத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு ரயில் நிலையத்தின் இரு நுழைவாயில்களிலும் 100க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
தமிழ் புலிகள் கட்சியின் மாநிலத் தலைவா் நாகை திருவள்ளுவன் தலைமையில் கட்சியினா் ஈரோடு காளை மாடு சிலை சந்திப்பு அருகே இருந்து ஈரோடு ரயில் நிலையம் நோக்கி ஊா்வலமாக வந்தனா்.
அப்போது ரயில் நிலைய நுழைவாயில் அருகே பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், அவா்களைத் தடுக்க முயன்றனா். ஆனால் கட்சியினா் இரும்பு தடுப்புகளை தள்ளிவிட்டு ரயில் நிலைய பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகம் வரை சென்றனா். அங்கு போலீஸாா் தடுத்ததால் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற கட்சியின் தலைவா் நாகை திருவள்ளுவன், மத்திய மாவட்ட தலைவா் சிந்தனை செல்வன் உள்பட 230 பேரை போலீஸாா் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனா். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.