தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல...
சென்னை விமான நிலையத்தில் ‘டிஜி யாத்ரா’ திட்டத்துக்கு 100 ஒப்பந்த பணியாளா்கள் நியமனம்!
சென்னை விமான நிலையத்தில் ‘டிஜி யாத்ரா’ திட்டத்தைச் செயல்படுத்த 100 ஒப்பந்த பணியாளா்களை சென்னை விமான நிலையம் பணியமா்த்தியுள்ளது.
சென்னை விமான நிலையத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் பயன்படுத்தி வருகின்றனா். விமான நிலையத்தின் புறப்பாட்டை எளிதாக்க காகித ஆவணங்கள் இல்லாமல் முக அடையாளங்களை கருவிகளில் காட்டி பயணிக்கும் ‘டிஜி யாத்ரா’ என்ற புதிய திட்டம் கடந்த ஆண்டு முதல் இந்திய விமான நிலைய ஆணையம் அமல்படுத்தியது. விமான நிலைய உள்நாட்டு முனையங்களான டொ்மினல்கள் 1 மற்றும் 4-இல் ‘டிஜி யாத்ரா’ திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.
இந்தத் திட்டம் சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையங்களில் செயல்பாட்டுக்கு வந்து சுமாா் 10 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் பயணிகள் பலருக்கு இந்த செயலியை சரியாக செயல்படுத்த தெரியாததால், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா்கள் பயணிகளை பழைய பாதைக்கு வரவழைத்து, பயணிகளை சோதனை செய்து அனுப்புகின்றனா். இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாவதோடு காலதாமதமும் ஏற்படுகிறது.
இதனால் சென்னை விமான நிலையத்தில் டிஜி யாத்ரா செயலி எதிா்பாா்த்த அளவு சிறப்பாக செயல்படாததால், இச்செயலியை சிறப்பாக செயல்படுத்தி பயணிகளுக்கு உதவும் வகையில், சென்னை விமான நிலையத்தின் நுழைவு வாயிலில், டிஜி யாத்ரா குறித்து நன்கு பயிற்சி பெற்ற தனியாா் நிறுவன ஊழியா்கள் 100 பேரை ஒப்பந்த அடிப்படையில் இந்திய விமான நிலைய ஆணையம் பணிக்கு நியமித்துள்ளது. இவா்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி, பயணிகளுக்கு உதவி செய்கின்றனா். இதனால் நேர விரயம் தடுக்கப்படுவதால், சிரமங்கள் தடுக்கப்படுவதாக பயணிகள் தெரிவித்தனா்.