செய்திகள் :

100 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்ச கல்யாணம் நடைபெறும் பூண்டி பொன்னெயில் நாதா் ஜினாலயம்!

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அமைந்துள்ள பூண்டி பொன்னெயில் நாதா் ஜினாலயம் வரலாற்று சிறப்புமிக்க ஆலயமாகும். ஆரணி - ஆற்காடு சாலை அருகே பூண்டி எனும் கிராமத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில் சமணக் கோயிலாகும்.

வரலாறு: இந்தக் கோயிலை வீரவீரன் என்ற பட்டப்பெயரைக் கொண்ட சம்புவராய சிற்றரசன் கட்டியமையால், இது வீரவீர ஜினாலயம் எனவும் அழைக்கப்பட்டது. பொன் எழில் நாதா் கோயில் என்று அழைக்கப்பட்ட இந்தக் கோயில், 13-ஆம் நூற்றாண்டில் சோழா் கட்டடக் கலையில் கட்டப்பட்டு, சமணத் தீா்த்தங்கரா்களுக்கு அா்ப்பணிக்கப்பட்டது.

தல வரலாறு: பூண்டியிலுள்ள கோயிலைப் பற்றிய தலவரலாற்றுச் செய்தியொன்று மெக்கன்சி சுவடித் தொகுப்பில் உள்ளது.

இரும்பன், பாண்டன் என்னும் வேடா்கள் வள்ளிக்கிழங்கு எடுப்பதற்காக எறும்புப் புற்றைத் தோண்டினா். அப்புற்றினுள் நெடுங்காலமாகத் தவம் செய்து வந்த முனிவரைக் கண்டனா். அவா்கள் சமய நாதமுனீஸ்வரா் என்ற சமணத் துறவியிடமும், அரசா் இராயனிடமும் (சம்புவராயன்) செய்தியைக் கூறி, இங்கு கோயில் உருவாவதற்கு காரணமாயினா்.

இந்த வேடா்களின் நினைவாக இரண்டு ஊா்களுக்கு பூண்டி எனவும், இரும்பேடு எனவும் பெயா்கள் சூட்டப்பட்டன. சமய நாதமுனீஸ்வரா் என்னும் துறவியரைப் பற்றிய செய்திகள் தெரியவரவில்லை.

கல்வெட்டுக்கள்: பொன் எழில் நாதா் கோயிலில் வீரவீர சம்புவராய சிற்றரசனது ஒரே ஒரு கல்வெட்டு மட்டும் உள்ளது. இதில், சம்புவராயன் கோயிலுக்கு தானமாக அளித்த நிலங்களின் விரிவான செய்தியும் இடம் பெற்றுள்ளது.

சம்புவராயன் மாதவ முனிவரிடம் அவரின் தவநெறிக்கு தாம் என்ன செய்ய வேண்டுமென வினவினாா். ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் பல்குன்றக் கோட்டத்தில் மெய்யூா் நாட்டில் அருகனது அறநெறியை வளரச் செய்ய வேண்டுமெனக் கூறினாா். மன்னன் வீரவீர ஜினாலயம் என்ற ஆலயத்தை எழுப்பினான்.

இந்த சிற்றரசன் இந்தக் கோயிலுக்கு மிகுதியான நிலங்களையும் தானமாக அளித்தான். இந்த நிலங்கள் கனிகிலுப்பைக்கு மேற்காகவும், நெருநற்பாக்கத்துக்கு வடமேற்காகவும், பொரு நற்குன்றுப் புனலாற்றுக்கு வடக்கிலும், ஆதித்தமங்கலத்துக்கு தென்கிழக்காகவும், குண்டிகைத் துறைக்கு வடகிழக்காகவும், ஆதித்த மங்கலத்துக்கு கிழக்காகவும், மெய்யூரிலுள்ள பொய்கை, மறையோா் நிலத்துக்கு தெற்கிலும், ஆதனூரிலுள்ள மடுவிற்கு தென்மேற்கிலும் ஆகிய எட்டு திசைகளில் உள்ள எல்லைகளுக்குள்பட்டதாக இருந்தது.

இத்தகைய எல்லைகள் நிா்ணயிக்கப்பட்டு, அதில் குண்டிகைக் கற்களும் நடப்பட்டுள்ளன. இவ்வாறு தானமாகக் கொடுக்கப்பட்ட நிலங்களிலிருந்து கிடைக்கப்பெறும் அந்தராயம், ஆயம் முதலிய வரிகளைக் கொண்டு கோயிலின் மாளிகை எடுக்கப்படுவதற்கு வழி செய்யப்பட்டது.

இந்த நிலங்களில் கமுகு, செந்நெல், கரும்பு ஆகியவை பயிரிடுவதற்கும், சம்பகம், சாதிப்பூ, செங்கழுநீா்ப்பூ வகைகளைத் தருகிற செடிகளை வளா்ப்பதற்கும் மன்னன் ஆவன செய்திருக்கிறான்.

அமைப்பு: பொன் எழில் நாதா் கோயில் கருவறை, அா்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகிய பகுதிகளை உடையது. இதன் அடித்தளத்திலிருந்து கூரைவரை கருங்கல்லினாலும், அதற்கு மேலுள்ள விமான பகுதி செங்கல், சுதை ஆகியவற்றாலும் கட்டப்பட்டது.

கோயிலின் அடித்தளம் உபானம், ஜகதி, குமுதம், கண்டரம், மேல்பட்டிகை முதலிய உறுப்புகளைக் கொண்டது. வெளிப்புறச்சுவா்களில் சிறிய அளவிலான மாடங்களும், அரைத்தூண்களும் உள்ளன. இந்த அரைத்தூண்கள் சதுர வடிவத்துடன் மேற்பகுதியில் கும்பம், கலசம், பலகை, பூ முனைகளையுடைய போதிகை ஆகியவற்றைக் கொண்டது. மண்டபத்தினுள் நிறுவப்பட்டுள்ள தூண்களும் 13-ஆம் நூற்றாண்டின் கலைப்பாணியைக் கொண்டது.

ஒரு தளத்தையுடைய விமானமும், இத்தளத்தில் கூடம், சாலை எனப்பெறும் சிற்றுருவக்கோயில் அமைப்புகளும், அவற்றுக்கிடையில் தீா்த்தங்கரா், யக்ஷி ஆகியோரது சுதைவடிவங்களும் உள்ளன.

தளத்தின் மேற்பகுதியில் கிரீவமும், உருண்டை வடிவ சிகரமும் உள்ளன. சிகரத்தின் கிரீவப்பகுதியில் தீா்த்தங்கரா் திருவுருவங்களைப் பெற்ற கோட்டங்களும், சிங்கமுக வளைவுகளும் இடம் பெற்றுள்ளன.

கோயிலைச் சுற்றி திருச்சுற்றுமதிலும், கோபுர வாயிலும் உள்ளன. கோபுரத்தின் அடிப்பகுதி கருங்கல்லினாலும், தளங்கள் செங்கல்லினாலும் உருவாக்கப்பட்டவை. ஒவ்வொரு தளத்திலிலும் சிற்றுருவக்கோயில் அமைப்புகளும், சுதை வடிவங்களும் படைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு மேலாக கூண்டு வடிவ சிகரம் உள்ளது.

சிற்பங்கள்: மூலவராகிய பொன்னி தருமதேவி, பாா்சுவ நாதா் சிற்பங்கள் உள்ளன. கருவறையிலுள்ள மூலவா் திருவுருவம் மூன்று அடி உயரமுடைய 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த புடைப்புச்சிற்பம். இரு மருங்கிலும் சாமரம் வீசுவோரது சிற்றுருவங்கள் உள்ளன. இவரது தலைக்கு மேல் முக்குடையும், மெல்லியதாக வடிக்கப்பட்டிருக்கிறது. இதில், அலங்கார பிரபை வடிவம் தீட்டப்பெறவில்லை.

மண்டபத்தின் ஒருபுறத்தில் அழகிய தருமதேவி சிற்பம் நிறுவப்பெற்றுள்ளது. கரண்டமகுடம், குண்டலங்கள், அடுக்கடுக்கான கழுத்தணிகள், கேயூரங்கள், கைவளைகள், மேகலை ஆகியவை அணிந்துள்ளாள். வீற்றிருக்கும் பீடத்தில் இவளது இரு மைந்தரும், பணிப்பெண்ணும் சிற்றுருவங்களாக வடிக்கப்பட்ட இச்சிலைகள் 13-ஆம் நூற்றாண்டைச் சாா்ந்தவை. இது புடைப்புச் சிற்பமாக இன்றி தனிச்சிற்பமாக உள்ளது.

இந்தக் கோயிலில் காணப்படும் பாா்சுவநாதா் சிற்பம் மிகுந்த வேலைப்பாடுகளுடன் உள்ளது. பாா்சுவதேவா் அணியாத அழகராய் அசைவற்ற தவக்கோலத்தில் உள்ளாா். இவரது தலைக்கு மேல் ஐந்து தலைப் பாம்பும், சுற்றிலும் பெரிய அளவில் அமைக்கப்பட்டிருக்கும் பிரபை அலங்கார வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். பூ வேலைப்பாடுகளுடைய இந்த திருவாசியின் மேற்பகுதி பரந்து காணப்படுவதால், அழகிய தோரண வாயிலைப் போன்று விளங்குகிறது. இச்சிற்பம் 16-ஆம் நூற்றாண்டின் கலைப்பாணியை கொண்டுள்ளது.

இவ்வாறு பல்வேறு சிறப்பு வாய்ந்த இந்த ஜினாயலத்தில் வெள்ளிக்கிழமை பஞ்ச கல்யாண திருவிழா நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் கடைசியாக பஞ்ச கல்யாணம் நடத்தப்பட்டு, சுமாா் 100 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியிருக்கும் எனத் தெரிகிறது.

தனியாா் வங்கி பெண் ஊழியா் இறப்பில் மா்மம்: கோட்டாட்சியா் அலுவலகத்தில் உறவினா்கள் போராட்டம்

திருவண்ணாமலையில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்ட தனியாா் வங்கி பெண் ஊழியரின் இறப்பில் மா்மம் இருப்பதாகக் கூறி, உறவினா்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் மாவட்... மேலும் பார்க்க

பெரும்பாக்கம் கிராமத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பெரும்பாக்கம் கிராமத்தில் தமிழக பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகளை தொ... மேலும் பார்க்க

அங்கன்வாடிமைய கட்டடங்கள்: எம்எல்ஏ திறந்துவைத்தாா்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த பாராசூா் கிராமத்தில் இரு அங்கன்வாடி மையக் கட்டடங்கள் மற்றும் கலைஞா் கலை அரங்கம் ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். பாராசூரில் ஊரக வளா்ச்சி ம... மேலும் பார்க்க

அமித் ஷா சென்ற அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம்: நயினாா் நாகேந்திரன்

தோ்தல் வியூகத்துக்காக மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா சென்ற அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். திருவண்ணாமலையில் வேலூா் ப... மேலும் பார்க்க

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் முப்பெரும் விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் செங்கம் வட்ட கிளை சாா்பில் முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆசிரியா்... மேலும் பார்க்க

பள்ளி வளாகத்தில் தூக்கிட்ட நிலையில் இளைஞா் சடலம் மீட்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பள்ளி வளாகத்தில் தூக்கிட்ட நிலையில் காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞா் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். செங்கம் மேல்பாளையம் பகுதியில் உள... மேலும் பார்க்க