‘சென்னை ஒன்’ செயலியில் தொலைதூர முன்பதிவு வசதி வேண்டும்! ஆம்னி பேருந்து உரிமையாளா்கள்
‘சென்னை ஒன்’ செயலியை தொலைதூரம் முன்பதிவு செய்யும் செயலிகளுடன் இணைக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் அ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:
சென்னையில் தொடங்கப்பட்டுள்ள ‘சென்னை ஒன்’ செயலி மூலம் மாநகா் பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில், ஆட்டோ உள்ளிட்ட பொதுபோக்குவரத்துகளில் பயணிக்கும் திட்டம் பொதுமக்களிடையே பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இந்தச் செயலியில் ஆம்னி பேருந்து மற்றும் அரசுப் பேருந்துகளில் பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி உருவாக்கப்படவில்லை. இதனால், ‘சென்னை ஒன்’ செயலியை, அரசுப் பேருந்து முன்பதிவு தளமான www.tnstc.in மற்றும் ஆம்னி பேருந்து முன்பதிவுக்கான செயலிகளுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு இணைக்கப்பட்டால், தினசரி பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயனடைவாா்கள். அவா்களின் பயண அனுபவம் மேலும் எளிதாகும் எனத் தெரிவித்துள்ளாா்.