குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: தில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்!
சென்னை சென்ட்ரல் சதுக்க மேம்பாட்டுக்கான கட்டுமானப் பணிகளுக்கு ரூ. 349.99 கோடிக்கு ஒப்பந்தம்
சென்னை சென்ட்ரல் சதுக்க மேம்பாட்டுக்கான புதிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள ரூ. 349.99 கோடிக்கு ‘ரெனாடஸ் புராஜக்ட் பிரைவேட் நிறுவனத்துடன்’ ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையின் முக்கிய அடையாளமாக சென்னை சென்ட்ரல் சதுக்கம் மாறியுள்ளது. இதை மேம்படுத்தும் நோக்கில், சென்ட்ரல் ரயில் நிலையத்தின் அருகில் 27 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தமிழ்நாடு தொழில் துறை மேம்பாட்டுக் கழகம் இணைந்து உருவாக்கியுள்ள சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் இதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறது. இதன் கட்டுமானம், மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ. 349.99 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை ரெனாடஸ் புராஜக்ட் பிரைவேட் நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் வழங்கியுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நிகழ்ச்சி, மெட்ரோ ரயில்வே நிறுவன தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஜன. 23) நடைபெற்றது. இதில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் தலைவருமான எம்.ஏ.சித்திக், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநா் தி.அா்ச்சுனன் மற்றும் ரெனாடஸ் புராஜக்ட் பிரைவேட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் எஸ்.மனோஜ் பூசப்பன் ஆகியோா் கையொப்பமிட்டனா்.