Vikatan Digital Awards 2025: 'இளம் பாய்ச்சல்' - அர்ச்சனா குமார்| Best Performer ...
சென்னைக்குப் போன சபரிமலை கோயில் தங்கக் கவசம்; திருப்பிக் கொண்டுவர நீதிமன்றம் உத்தரவு; பின்னணி என்ன?
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் கருவறையின் முன்பகுதியில் இருபுறமும் அமைந்திருக்கும் துவார பாலகர்கள் சிலைகளில் தங்க முலாம் பூசப்பட்ட கவசம் பொருத்தப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டு உண்ணிகிருஷ்ணன் போற்றி என்பவர் உபயமாக வழங்கிய இந்தக் கவசங்களை சென்னை ஸ்மார்ட் கிரியேசன்ஸ் ஏஜென்ஸி தயாரித்து வழங்கியிருந்தது. இதற்கிடையே தங்கக் கவசங்களில் சில பராமரிப்புப் பணிகள் இருந்ததை அடுத்து சென்னைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
அதேசமயம் சபரிமலை ஸ்பெஷல் கமிஷனர் மற்றும் ஐகோர்ட்டின் அனுமதி இல்லாமல் தங் கவசங்கள் பராமரிப்புப் பணிக்காக சென்னைக்குக் கொண்டுசெல்லப்பட்டது சரியான நடவடிக்கை இல்லை எனக் கேரளா ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
பராமரிப்புப் பணிகளை நிறுத்த வேண்டும், அவற்றைத் திரும்பக் கொண்டுவரவேண்டும் எனச் சென்னை ஸ்மார்ட் கிரியேசன்ஸ் ஏஜென்ஸி மற்றும் உபயதாரரான உண்ணிகிருஷ்ணன் போற்றி ஆகியோருக்கு ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
ஐயப்ப சுவாமி திருமேனியின் முத்திரை மாலை ஜெபமாலை யோக தண்டம் ஆகியவற்றின் பராமரிப்புப் பணிகள் சம்பந்தமாக ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மீறும் செயல் எனவும் கோர்ட் சுட்டிக்காட்டி உள்ளது.
இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருக்கக் காரணங்கள் இருந்தால் தெரிவிக்க வேண்டும் எனத் திருவிதாங்கூர் தேவசம்போர்டு கமிஷனர், சபரிமலை நிர்வாக அதிகாரி, திருவாபரணம் கமிஷனர் ஆகியோருக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தங்கக் கவசங்கள் பராமரிப்புப் பணிகளுக்காக அனுப்பி வைப்பதற்கு முடிவு செய்யப்பட்ட ஃபைல்களும், ஆதாரங்களையும் நாளை (வெள்ளிக்கிழமை) கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் துவார பாலகர்கள் சிலையில் ஏற்பட்டுள்ள பழுதுகளைச் சரிசெய்ய வேண்டும் என 2023-ம் ஆண்டு தந்திரி அளித்த கடிதத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
விதிகளைக் கடைப்பிடித்து, பாதுகாப்பு வழிமுறைகளின்படி தங்கக் கவசம் கொண்டு செல்லப்பட்டது எனவும், இது சம்பந்தமாக சபரிமலை ஸ்பெஷல் கமிஷனருக்கு போன் மூலமும், கடிதம் மூலமும் கடந்த 8-ம் தேதி விபரம் தெரிவிக்கப்பட்டதாக தேவசம்போர்டு கூறியுள்ளது. ஆனால், சபரிமலை ஸ்பெஷல் கமிஷனருக்கு முன்னரே தகவல் தெரிவிக்கவில்லை.
அதனால் கோர்ட்டுக்கு தகவல் தெரிவிக்க உரிய சமயம் கொடுக்காமல் தங்கக் கவசங்கள் கழற்றி எடுக்கப்பட்டுள்ளதற்கும் கோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. விலைமதிப்புமிக்க பொருட்களின் பராமரிப்புப் பணிகளை கோயில் வளாகத்தில் வைத்து தீவிர மேற்பார்வையில் நடத்த வேண்டும் என அறிவுறுத்தல் ஏற்கனவே உள்ளது எனவும் கோர்ட் தெரிவித்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க 2019-ம் ஆண்டு தங்கக் கவசங்கள் பொருத்தப்பட்ட சமயத்தில் 40 ஆண்டுகள்வரை வாரண்டி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், பொருத்தப்பட்ட 6 ஆண்டுகளிலேயே தயாரிக்கப்பட்ட இடத்துக்கே கொண்டுசென்று பராமரிக்கவேண்டிய அவசியம் குறித்துத் தெளிவுபடுத்தவில்லை.
அப்படியானால் கருவறை கதவுகள் உள்ளிட்டவற்றிலும் பராமரிப்புப் பணி செய்ய வேண்டுமா? துவார பாலகர்களின் கவசம் மட்டும் கொண்டுசென்றது தேவையற்றது மற்றும் முறையற்றதும் ஆகும் என ஐகோர்ட் கூறியுள்ளது.