Charlie Kirk கொலை: அரை கம்பத்தில் அமெரிக்க கொடி; எதிர்கட்சியினர் சொல்வது என்ன?
அமெரிக்காவின் உதா பல்கலைக்கழகத்தில் அதிபர் ட்ரம்ப்பின் கூட்டாளியான சார்லி கிர்க் சுட்டுக்கொல்லப்பட்டார்.
Charlie Kirk மற்றும் Turning Point USA
சார்லி கிர்க் ஒரு வலதுசாரி பழமைவாத செயற்பாட்டாளர் ஆவார். 31 வயதே ஆகும் இவர், மாணவர்களின் முகமாகப் பார்க்கப்படுகிறார். 2012 ஆம் ஆண்டு தனது 18 வயதில், டர்னிங் பாயிண்ட் யு.எஸ்.ஏ என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறார். இது ஒரு உள்நாட்டு என்.ஜி.ஓ, மாணவர்களுக்கு வலதுசாரி சிந்தனையைக் கடத்துவதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இடதுசாரி ((லிபரல்/முற்போக்கு) சிந்தனைகள் அதிகம் இருப்பதாகக் கருதும் இந்த அமைப்பு சுதந்திர சந்தை (free market), வரையறுக்கப்பட்ட அரசு (limited government), தனிநபர் சுதந்திரம், பாரம்பரிய மதிப்புகள் ஆகியவற்றை வலியுறுத்தும் கோட்பாடுகளை முன்வைக்கிறது.
அமெரிக்க தேர்தல்களில் குடியரசு கட்சிக்கு ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் பிரசாரம் செய்துவருகிறது டர்னிங் பாயிண்ட் யு.எஸ்.ஏ மற்றும் அதன் துணை அமைப்புகள்.
கடந்த தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்புக்காக பரப்புரை மேற்கொண்டு குடியரசு கட்சியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார் சார்லி கிர்க். நாடுமுழுவதும் பல்கலைக்கழகங்களில் திறந்தவெளி விவாதங்களை நடத்தினார். இவரது வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.
அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ், "உதாவில் நடந்த துப்பாக்கி சூடு என்னை கடுமையாக பாதித்துள்ளது. நானும் டாகும் (Dogh (Douglas) கமலாவின் கணவர்) சார்லி கிர்க் மற்றும் அவரது குடும்பத்துக்காக பிரார்த்தனை செய்கிறோம்.
நான் தெளிவாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்: அமெரிக்காவில் அரசியல் வன்முறைக்கு இடமில்லை. நான் இந்த செயலை கண்டிக்கிறேன், இது மேலும் வன்முறைக்கு வழிவகுக்காமல் இருக்க நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
துப்பாக்கி சூடு
உதா பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே கலந்துரையாடியபோது இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்துக்கொண்டிருந்தபோது தொலைவிலிருந்து வந்த தோட்டா துளைத்ததில் சுற்றியிருந்த அனைவரும் பதட்டமடைந்து சிதறியிருக்கின்றனர். சார்லி கிர்க் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
பல்கலைக்கழக அதிகாரிகள் கூறுவதன்படி, கூட்டம் நடந்த இடத்திலிருந்து 180 மீட்டர் தொலைவில் உள்ள கட்டடத்திலிருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது. கொலையாளியைக் கண்டுபிடிக்கும் பணியில் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. வெள்ளை மாளிகையில் அமெரிக்க தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
அவரது இறப்புக்கு ஜோ பைடன், ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் உட்பட முன்னாள் அதிபர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மக்களாட்சி கட்சியினர் இரங்கல்
"நம் நாட்டில் இதுபோன்ற வன்முறைக்கு இடம் கிடையாது. இதற்கு உடனடியாக முடிவுகட்ட வேண்டும். சார்லி கிர்க்கின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்காக நானும் ஜில்லும் பிரார்த்திக்கிறோம்" என ட்வீட் செய்துள்ளார் ஜோ பைடன்.
முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, "சார்லி கிர்க்கை சுட்டவரின் நோக்கம் என்ன என்பதை நாம் இன்னும் அறியவில்லை, எனினும் ஜனநாயகத்தில் இதுபோன்ற இழிவான வன்முறைக்கு இடம் கிடையாது" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், "சார்லி கிர்க்கின் கொலையால் நான் வருத்தமும் கோபமும் அடைந்துள்ளேன். நாம் அனைவரும் ஆழ்ந்த சுயபரிசோதனை செய்து, விவாதங்களில் ஆர்வத்துடன், அதே சமயம் அமைதியான முறையில் ஈடுபட நமது முயற்சிகளை இரட்டிப்பாக்குவோம் என்று நம்புகிறேன். நானும் ஹிலாரியும் எரிக்கா, அவரது இரண்டு குழந்தைகளுக்காக பிரார்த்திக்கிறோம்." என ட்வீட் செய்துள்ளார்.
மனம் வருந்திய டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் வலைத்தளப் பக்கத்தில், "அமெரிக்க இளைஞர்களின் இதயத்தை சார்லியை விட வேறு யாரும் நன்றாகப் புரிந்து கொள்ளவில்லை. அவர் அனைவராலும், குறிப்பாக என்னால், நேசிக்கப்பட்டு போற்றப்பட்டார், இப்போது அவர் எங்களுடன் இல்லை. மெலனியாவும் நானும் அவரது அழகான மனைவி எரிகா மற்றும் குடும்பத்தினருக்கு எங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் உன்னை நேசிக்கிறோம் சார்லி" எனப் பதிவிட்டுள்ளார்.
President Trump shares a message on the assassination of Charlie Kirk.
— The White House (@WhiteHouse) September 11, 2025
“I ask all Americans to commit themselves to the American values for which Charlie Kirk lived & died. The values of free speech, citizenship, the rule of law & the patriotic devotion & love of God.” pic.twitter.com/3fBSgs4Zxa
அவர் வெளியிட்ட வீடியோவில் "இது அமெரிக்காவுக்கு இருட்டான தருணம்" எனக் கூறியுள்ளார். மேலும், "சார்லி வாழ்ந்து மரித்த அமெரிக்க விழுமியங்களுக்காக ஒவ்வொரு அமெரிக்கரும் தங்களை அர்ப்பணிக்க வேண்டும். பேச்சு சுதந்திரம், குடியுரிமை, சட்டத்தின் ஆட்சி, தேசபக்தி மற்றும் கடவுளின் அன்பு ஆகியவற்றின் மதிப்புக்காக" எனப் பேசினார் ட்ரம்ப்.