மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர்: `பழனிசாமியை சுட்டிக்காட்டவே அப்படி பேசினேன்' - டிடிவி தினகரன்
மதுரை விமான நிலையத்துக்கு பெயர்
மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டப்படுமென எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை விமர்சித்து டிடிவி தினகரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன் தனது பேச்சு எடப்பாடி பழனிசாமியை சுட்டிக்காட்டியதே தவிர, முத்துராமலிங்கனாருக்கு மரியாதை செலுத்தப்படுவதை எதிர்த்தது அல்ல என விளக்கமளித்துள்ளார்.
TTV Dinakaran கூறியதாவது:
"மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெருமகனாரின் பெயர் சூட்டப்பட வேண்டும், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டுமென்பது தென் தமிழக மக்களின் நீண்டநாள் கோரிக்கை. இதை எங்கள் தேர்தல் வாக்குறுதியிலேயே சொல்லியிருக்கிறோம்.

2021 தேர்தலுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி ஏழரைத்தனமாக 10.5% இட ஒதுக்கீட்டை அறிவித்தது தென்தமிழகத்தில் உள்ள 105 சமூகங்களின் எதிர்ப்பை கிளப்பியது. இங்கே வரும்போதெல்லாம் அவருக்கு எதிராக எப்படி கோஷங்கள் எழுப்பப்பட்டன என்பதை அனைவருமே பார்த்தோம்.
பழனிசாமி அரசியல்
இதை மனதில் வைத்துக்கொண்டு தேவர் பெயரில் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்வதைத்தான் நாங்கள் சுட்டிக்காட்டினோம்.
ஆனால் இதை தவறுதலாகவோ, தூண்டுதல் பெயரிலோ திரித்துவிட்டார்கள். எங்கள் தேர்தல் வாக்குறுதியில் உள்ள கோரிக்கையை நாங்கள் எப்படி மறுக்க முடியும்? அமமுக எல்லா சமூகங்களுக்கும் பொதுவான இயக்கம்," என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ள தினகரனிடம் நயினார் நாகேந்திரன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவாரா என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது, "எனது நீண்டகால நண்பர். நாங்கள் எல்லாம் அம்மாவின் தொண்டர்களாக பயணித்தவர்கள். அவர்மீது தனிப்பட்ட கோபங்கள் எனக்கு கிடையாது. ஓபிஎஸ் விவகாரத்தில் அவர் நடந்துகொண்டது குறித்து நான் பேசியிருந்தேன். அதற்கு அவர் பதிலளித்தார் அவ்வளவுதான்ம், நல்ல நண்பராக அவர் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம்," என்றார்.
உதயநிதி ஸ்டாலின் பேச்சு
மேலும் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அவர், "துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 'எடப்பாடி எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டும். 100 ஆண்டுகள் வாழ வேண்டும், அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் எங்களுக்கு வெற்றி நிச்சயம்' எனக் கூறியிருக்கிறார்.
இதை அவர் சிலேடையாக சொல்லியிருந்தாலும் வஞ்சப்புகழ்ச்சியாக சொல்லிருந்தாலும் அதுதான் உண்மை.

2019 முதல் இரட்டை இலை சின்னம் இருந்தும், தொண்டர்கள் பலம் இருந்தும், பணபலம் இருந்தும் தொடர்ந்து தோல்வியைச் சந்திப்பதற்கு பழனிசாமிதான் காரணம் என்பதை அங்கு உள்ளவர்கள் உணர வேண்டும்.
பழனிசாமி என்ற சுயநலமும், துரோக சிந்தனையும் உள்ள மனிதர் தலைமையில் இருக்கும் வரை யார் என்ன முயற்சி செய்தாலும் தோல்வி உறுதி," என்றார்.