மகளிர் உலகக் கோப்பையில் அனைத்து நடுவர்களுமே பெண்கள்..! ஐசிசி அதிரடி!
நெதன்யாகு எச்சரிக்கை: சொந்த இடத்தை விட்டு வெளியேறும் காசா மக்கள்; எங்கே செல்வார்கள்?
இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது.
'பிடித்து வைத்திருக்கும் பணயக் கைதிகளை விடுவியுங்கள்' என்று இஸ்ரேல் ஒவ்வொரு நாளும் பாலஸ்தீனத்தின் மீது ஏவுகணை மற்றும் டிரோன் மழைகளைப் பொழிந்து வருகிறது.
இன்னொரு பக்கம், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாத அமைப்பு, இஸ்ரேலுக்குள் சென்று, அங்கு தாக்குதல் நடத்துகிறது.
இந்த இரு பக்கத்திலுமே, அரசாங்கத்தை விட, மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள், செத்து மடிகிறார்கள்.
போரினால் மட்டுமல்லாமல், பாலஸ்தீனத்தில் பசியாலும் மக்கள் இறந்து வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது பாலஸ்தீனத்தில் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது நெதன்யாகு அரசு.

நெதன்யாகுவின் எச்சரிக்கை
கடந்த திங்கட்கிழமை, காசா மக்களை அவர்களது பகுதியிலிருந்து வெளியேறுமாறு நெதன்யாகு எச்சரித்திருந்தார்.
இதையொட்டி, காசா மக்கள் தற்போது தங்களது பகுதியிலிருந்து கொத்து கொத்தாக வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
உணவுப்பொருள் தொடங்கி எரிபொருள் வரை அனைத்துப் பொருள்களின் விலையும் பாலஸ்தீனத்தில் தாறுமாறாக உள்ளது.
போரினால் ஏற்கெனவே பாலஸ்தீன மக்கள் பலருக்கு வேலைவாய்ப்பு பறிபோய் உள்ளது. பொருளாதாரமும் அடிவாங்கியுள்ளது.
இந்த நிலையில், அவர்கள் தங்களது குடும்பத்தை இடம்பெயர்த்து அழைத்துச் செல்வது மிகக் கடினம். இதையும் தாண்டி, காசாவைத் தாண்டிய வெளியிடங்களில், ஏற்கெனவே வெளியேறிய மக்கள் தஞ்சமடைந்துவிட்டதால், இப்போது காசாவில் இருந்து கிளம்பியுள்ள மக்களுக்கு இடமில்லை.
மேலும், அவர்கள் தஞ்சம் புகும் இடங்களிலும் தாக்குதல்களை நடத்தி வருகிறது இஸ்ரேல்.
இந்த மக்கள் எங்கேதான் செல்வார்களோ?