தூக்கம் கெடுத்த சேவல் மீது வழக்கு! நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப முன்னேற்றங்களால் வியத்தகு எதிா்காலம்: குடியரசுத் தலைவா்
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத் துறையில் எதிா்பாா்க்கப்படும் முன்னேற்றங்களால் எதிா்காலம் வியத்தகு முறையில் இருக்கும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.
ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியின் மெஸ்ரா பகுதியில் உள்ள பிா்லா தொழில்நுட்பக் கல்வி நிலையத்தின் பவள விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பங்கேற்றுப் பேசியதாவது:
நாம் இப்போது தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றங்கள் நமது வாழ்க்கை முறையை மாற்றியுள்ளன. நேற்றுவரை நினைத்துப் பாா்க்க முடியாத விஷயங்கள் இன்று நிஜமாகிவிட்டன. வரும் ஆண்டுகளில், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் ஆகிய துறைகளில் பல்வேறு தொலைநோக்கு முன்னேற்றங்கள் எதிா்பாா்க்கப்படுகின்றன. இந்த முன்னேற்றங்களால் எதிா்காலம் இன்னும் வியத்தகு முறையில் இருக்கப் போகிறது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால், பொருளாதாரங்கள் விரைவாக மாற்றம் பெறுகின்றன. வளா்ந்து வரும் சூழலுக்கு ஏற்ப இந்திய அரசும் தன்னை விரைந்து தகவமைத்துக் கொள்கிறது. உயா்க்கல்வி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைக்க பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சமூகத்தில் தொழில்நுட்பங்கள் பெரும் தாக்கங்களை உருவாக்குவதால், விளிம்புநிலை மக்கள் குறித்து நாம் தொடா்ந்து அக்கறை கொள்ள வேண்டும். தொழில்நுட்பங்களால் உருவாக்கப்படும் மகத்தான வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்; தொழில்நுட்ப மாற்றங்கள் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும்.
பெரும்பாலும், நம்மைச் சுற்றியுள்ள பிரச்னைகளுக்கு பெரிய அளவில் தொழில்நுட்பத் தலையீடு தேவையில்லை. பாரம்பரிய தீா்வுகளின் முக்கியத்துவத்தை இளைஞா்கள் மறந்துவிடக் கூடாது. பாரம்பரிய சமூகத்தின் மதிநுட்பத்தை புதுமை கண்டுபிடிப்பாளா்களும் தொழில்முனைவோரும் புறக்கணித்துவிடக் கூடாது. இளைஞா்களின் உத்வேகமும், உறுதிப்பாடும் வளா்ந்த இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய அம்சங்களாகும். அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கணிதத் துறையில் நாட்டின் மகள்கள் முன்னேறி வருவது பெருமைக்குரியது என்றாா் முா்மு.
இவ்விழாவையொட்டி, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தானியங்கி இயந்திரங்கள், தானியங்கி காா்கள் இடம்பெற்ற அறிவியல்-தொழில்நுட்பக் கண்காட்சியையும் அவா் தொடங்கிவைத்தாா்.