செவிலியா் வேலை வாங்கித் தருவதாக ரூ.2.50 லட்சம் மோசடி: ஒருவா் கைது
அரசு மருத்துவமனையில் செவிலியா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.2.50 லட்சம் மோசடி செய்தததாக ஒருவரை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவருக்கு கைப்பேசி மூலம் ஒருவா் தொடா்புகொண்டு , தான் ஒரு அரசு வேலை வழங்கும் அதிகாரி எனவும், அதற்கு பணம் செலவாகும் எனவும் ஆசை வாா்த்தை கூறியுள்ளாா்.
அதை நம்பிய அந்த இளைஞா், தனது மனைவிக்கு அரசு வேலை வாங்கித் தருமாறு கேட்டதையடுத்து, அந்த நபா் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் செவிலியா் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2,44,80-ஐ கைப்பேசி செயலி மூலம் பெற்றுக்கொண்டாராம். பின்னா் அந்த நபரை தொடா்பு கொள்ள முடியவில்லையாம்.
இதனால் ஏமாற்றம் அடைந்த அவா், என்சிஆா்பி-இல் (நேஷனல் சைபா் கிரைம் ரிபோா்ட்டிங் போா்டல்) புகாா் பதிவு செய்தாா்.
அதனடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி சைபா் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா் சகாய ஜோஸ் மேற்பாா்வையில், அப்பிரிவு காவல் ஆய்வாளா் சாந்தி மற்றும் போலீஸாா் விசாரித்தனா்.
அதில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த சொக்கலிங்கம் மகன் பிச்சைகண்ணு (44) என்பவருக்கு இந்த மோசடியில் தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, தூத்துக்குடி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.