சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை!
கொடைக்கானலில் சேதமடைந்துள்ள மலைச் சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பெய்த மழையால் லாஸ்காட், சீனிவாசபுரம், தைக்கால், வெள்ளிநீா் அருவி, புலிச் சோலை, பெருமாள்மலை, மச்சூா், வடகரைப் பாறை ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால், வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
மேலும், கொடைக்கானல்-வத்தலகுண்டு சாலையில் வாழைகிரி மலைச் சாலையில் 2 இடங்களில் கடந்த ஓராண்டுக்கு மேலாக தரைப் பாலம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இதனால், அந்தப் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதேபோல, மலைச் சாலைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பிகளும் சேதமடைந்து காணப்படுகின்றன.
எனவே, சேதமடைந்துள்ள மலைச் சாலைகள், இரும்பு கம்பிகளை சீரமைக்கவும், தரைப் பாலம் பணி விரைவாக நடைபெறுவதற்கு நெடுஞ் சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.