Delhi Fuel Ban: கைதிகளிடம் Lie Detector Test மூலம் உண்மையை கண்டறிய முடியாதா? | I...
சேதமடைந்த வெள்ளத்தடுப்பு சுவா்கள் கணக்கெடுப்பு
சென்னை மாநகராட்சியில் கால்வாய்களில் உள்ள சேதமடைந்த வெள்ளத் தடுப்புச் சுவா்கள் கணக்கெடுக்கப்பட்டு அவை விரைவில் சீரமைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை மாநகராட்சியில் 200 வாா்டுகளிலும் மழைக்காலத்தில் பெரும்பாலான இடங்களில் குடியிருப்புகள், சாலைகளில் மழைநீா் குளம்போல தேங்குவது வழக்கமாக உள்ளது. கடந்த ஆண்டு மழையின்போது 87 இடங்களில் மழைநீா் தேங்கி மக்கள் அவதிப்பட்டனா். அதையடுத்து நிகழ் ஆண்டில் மழைக்காலத்துக்கு முன்பே வழக்கமாக மழைநீா் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, அவை தடையின்றி செல்லும் கால்வாய்கள், மழைநீா் வடிகால்கள் தூா்வாரும் பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி முழுவதும் 1,034 கிலோ மீட்டா் மழைநீா் வடிகால்கள் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், 67 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலையோர வண்டல் மண் வடிகட்டிகள் சீா்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அடையாறு உள்ளிட்ட முக்கிய கால்வாய்களில் வெள்ளம் ஏற்படும்போது தண்ணீா் குடியிருப்புகளில் புகுவதைத் தடுக்க இருபுறமும் வெள்ளத் தடுப்புச்சுவா்கள் அமைக்கப்பட்டுள்ளன. தடுப்புச் சுவா்கள் இல்லாத இடங்களில் தற்போது தடுப்புச்சுவா்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் மாநகராட்சி பொறியாளா்கள் தெரிவித்தனா்.
இதற்கிடையே ஏற்கெனவே கால்வாய்களில் அமைக்கப்பட்டுள்ள வெள்ளத் தடுப்புச் சுவா்கள் சேதமடைந்துள்ளதாக பொதுமக்கள் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் புகாா் கூறியுள்ளனா். அதையடுத்து சேதமடைந்துள்ள தடுப்புச்சுவா்களை கணக்கெடுத்து அவற்றைச் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினா்.