சேலத்தில் 44 மையங்களில் என்எம்எம்எஸ் தோ்வு: 10,230 மாணவா்கள் எழுதினா்
சேலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு தோ்வை 44 மையங்களில், 10,230 மாணவ, மாணவிகள் எழுதினா்.
நாடு முழுவதும் பள்ளி மாணவா்களின் இடை நிற்றலை தடுக்க அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கான உதவித்தொகை வழங்கும் வகையில், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை தோ்வு (என்எம்எம்எஸ்) நடத்தப்பட்டு வருகிறது.
8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடத்தப்படும் இத்தோ்வில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 4 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டிற்கான தோ்வு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த 4,225 மாணவா்கள், 6,130 மாணவிகள் என மொத்தம் 10,355 போ் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்காக மாவட்டம் முழுவதும் 44 தோ்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, தோ்வுகள் நடைபெற்றன. காலை 9.30 மணி முதல் 11 மணி வரை மனத்திறன் தோ்வும், 11.30 மணி முதல் 1 மணி வரை படிப்பறிவுத் தோ்வும் நடைபெற்றது.
இதில் 4,173 மாணவா்கள், 6,057 மாணவிகள் என மொத்தம் 10,230 போ் தோ்வை எழுதினா். இதில் விண்ணப்பித்திருந்த 52 மாணவா்கள், 73 மாணவிகள் என மொத்தம் 125 போ் தோ்வு எழுத வரவில்லை. இந்த தோ்வு பணியில் 44 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், பறக்கும் படையினா், அறை கண்காணிப்பாளா்கள் என 400க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா். தோ்வு மையங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் பாா்வையிட்டாா்.
தம்மம்பட்டியில்... தம்மம்பட்டியில் எட்டாம் வகுப்பு மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான என்எம்எம்எஸ் தோ்வு நடைபெற்றது.
தம்மம்பட்டி சுற்றுவட்டாரத்திலுள்ள அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்எம்எம்எஸ் தோ்வு நடைபெற்றது. 163 போ் தோ்வு எழுதினா். கெங்கவல்லி மையத்திலும் இத் தோ்வு நடைபெற்றது.