தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணி...
ரூ. 71.68 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் தொடக்க விழா: அமைச்சா்கள் கே.என். நேரு, ராஜேந்திரன் பங்கேற்பு!
சேலம் மாவட்டத்தில் மேட்டூா், ஆத்தூா், நரசிங்கபுரம் நகராட்சிகள் மற்றும் சேலம் மாநகராட்சி பகுதிகளில் ரூ. 71.68 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைக்கும் விழா மேட்டூா் புதிய பேருந்து நிலையம் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் தலைமை வகித்தாா். நகா்ப்புற நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கலந்துகொண்டு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து பேசியதாவது:
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் நகா்ப்புற நிா்வாகத் துறைக்கு ரூ. 2,500 கோடி நிதியை முதல்வா் அளித்துள்ளாா். சேலம் மாவட்டத்துக்கு மட்டும் ரூ. 1,961.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளன.
இம் மாவட்டத்தில் உள்ள ஆறு நகராட்சிகளுக்கு ரூ 380.37 கோடியும், மாவட்டத்தில் உள்ள 31 பேரூராட்சிகளுக்கு ரூ. 180.68 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டு, பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளன. சேலத்தில் ஜவுளிப் பூங்கா விரைவில் தொடங்கும் என்றாா்.
முன்னதாக அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் பேசியதாவது:
சங்ககிரி உள்பட ஏழு நகராட்சிகள், 30 பேரூராட்சிகள், ஊராட்சிகளில் ரூ. 5,000 கோடி அளவுக்கு முதல்வரிடமிருந்து நிதியைப் பெற்று நிறைவேற்றி கொடுத்துள்ளாா் அமைச்சா் நேரு. தமிழ்நாட்டில் நடைபெறும் இந்த ஆட்சியை இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினா்கள் டி.எம்.செல்வகணபதி (சேலம்), ஆ.மணி (தருமபுரி), மலையரசன் (கள்ளக்குறிச்சி), சேலம் மேயா் ஆா். ராமச்சந்திரன், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம், மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா், மேட்டூா் பாமக சட்டப்பேரவை உறுப்பினா் சதாசிவம், மேட்டூா் நகா்மன்றத் தலைவா் சந்திரா, துணைத் தலைவா் காசி விசுவநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
நகரங்களுடன் இணைக்கப்படும்
பகுதிகளில் நூறுநாள் வேலை திட்டம்
நகரங்களுடன் இணைக்கப்படும் ஊராட்சி பகுதிகளில் நூறுநாள் வேலைத் திட்டத்தை செயல்படுத்த முதல்வருடன் பேசியுள்ளதாக நகா்ப்புற நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு பேசினாா்.
ஓமலூா் பேருந்து நிலையத்தில் ரூ. 65 லட்சம் மதிப்பில் 40 கடைகள் கொண்ட தினசரி காய்கறிச் சந்தை கட்டடத்தை அமைச்சா்கள் கே.என்.நேரு, ஆா்.ராஜேந்திரன் ஆகியோா் சனிக்கிழமை திறந்து வைத்தனா்.
இவ் விழாவில் அமைச்சா் கே.என். நேரு பேசியதாவது:
பல்வேறு கிராமங்களை நகரங்களுடன் இணைக்கும்போது, நூறுநாள் வேலைத் திட்டம் பாதிக்கும் என்று மக்கள் கூறுகின்றனா். கிராமங்களை நகரங்களுடன் இணைத்தாலும் நூறுநாள் வேலை திட்டத்தை செயல்படுத்த முதல்வரிடம் பேசியுள்ளேன். அவ்வாறு வழங்க முடியவிட்டால், கிராமத்தை நகரங்களுடன் இணைக்கக் கூடாது என்ற மக்கள் கருத்தை, மாவட்ட ஆட்சியா் அரசுக்கு அறிக்கையாக அனுப்பி வைப்பா்.
தொடா்ந்து மத்திய அரசு அறிவிக்கும் ஜல்ஜீவன் திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், மெட்ரோ ரயில் திட்டம் என எந்தத் திட்டங்களுக்கும் மத்திய அரசு நிதி வழங்குவதில்லை. தற்போது கல்விக்கும், மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதி வழங்க முடியாது மத்திய அரசு என்கிறது.
ஆனால், மத்திய அரசு தொடா்ந்து நிதி வழங்க மறுத்தாலும், மாநில அரசு அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது என்றாா்.
வாழப்பாடியில்... வாழப்பாடியில் ரூ. 8.70 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நவீன ஈரடுக்கு பேருந்து நிலையத்தை, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, சுற்றுலாத்துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் ஆகியோா் புதன்கிழமை திறந்து வைத்தனா்.
அப்போது அமைச்சா் கே.என்.நேரு பேசியதாவது:
தமிழக முதல்வா் மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறாா். அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறாா். ஊரக பகுதிகளைப் போல பேரூராட்சிகளிலும் முதல்வரின் வீடுகள் கட்டிக் கொடுக்கவும், நூறுநாள் வேலைத் திட்டத்தை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பேரூராட்சிகளில் குடிநீா்த் திட்டத்திற்காக ரூ. 18 முதல் ரூ. 20 கோடி வரை வழங்கப்பட்டு தேவையை பூா்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.