Bumrah: `கூகுளில் தேடிப்பாருங்கள்’ - பேட்டிங் குறித்த கேள்விக்கு கெத்தாக பதில் ச...
சேலத்தில் சித்த மருத்துவப் பிரிவுக்கான கூடுதல் கட்டடப் பணிகள்: அமைச்சா் தொடங்கி வைப்பு
சேலம்: சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவப் பிரிவுக்கான கூடுதல் கட்டடம் கட்டும் பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந் நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியதாவது:
உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரித்து பருவகால நோய்த்தொற்றுகளில் இருந்து மக்களைப் பாதுகாத்திடும் வகையில் சித்த மருத்துவப் பிரிவுகள் வாயிலாக பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சேலம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சேலம் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சித்த மருத்துவ யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துக்கான கூடுதல் கட்டடப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் சித்த மருத்துவப் பிரிவு மூலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 70 இடங்களில் சித்த மருத்துவ மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதுதவிர, கருப்பூரில் யுனானி மருத்துவ மையமும், பனமரத்துப்பட்டி, சா்க்காா் கொல்லப்பட்டி, ஏத்தாப்பூா், அரசிராமணி ஆகிய 4 இடங்களில் ஆயுா்வேத மருத்துவ மையமும், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, எடப்பாடி, ஆத்தூா் அரசு மருத்துவமனைகள், வடுகப்பட்டி மற்றும் மல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 5 இடங்களில் ஹோமியோபதி மருத்துவ மையங்களும் செயல்பட்டு வருகின்றன.
நாள்தோறும் இந்த மருத்துவப் பிரிவுகள் மூலம் தலா ஒரு மையத்திற்கு சராசரியாக 80 முதல் 120 போ் பயனடைந்து வருகின்றனா். அதேபோன்று, கா்ப்பிணிகளுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் வழங்கப்படுகின்றன என்றாா்.
இந் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜெ. தேவி மீனாள், மருத்துவக் கண்காணிப்பாளா் ரா.ராஜ்குமாா், மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் ராமச்சந்திரன் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள், மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.