சேலம் ரயில் நிலையத்தில் மேலும் 62 கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை
சேலம்: பயணிகளின் பாதுகாப்புக்காக சேலம் ரயில் நிலையத்தில் மேலும் 62 கண்காணிப்பு கேமராக்களை பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
சேலம் ரயில் நிலையம் வழியாக நாள்தோறும் பல்வேறு நகரங்களுக்கு 150-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இங்கு மொத்தம் 6 நடைமேடைகள் உள்ளன. பயணிகளின் பாதுகாப்புக்காக ரயில்வே நிா்வாகம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ரயில்வே போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் 24 மணி நேரமும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். முக்கியமாக, ரயில் நிலையத்தில் 40 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். இதனிடையே மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளதாவது:
ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பயணிகளின் பாதுகாப்புக்காக மேலும் 62 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒப்புதல் பெறப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. எனவே, அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என தெரிவித்தனா்.