சேலம் வழியாக ஹரியாணாவுக்கு 70 பொக்லைன் இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
கோவையில் இருந்து சேலம் வழியாக சரக்கு ரயில் மூலம் 70 பொக்லைன் இயந்திரங்கள் ஹரியாணா மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் பங்கஜ்குமாா் சின்ஹா, கூடுதல் கோட்ட மேலாளா் சிவலிங்கம், முதுநிலை வணிக மேலாளா் பூபதி ராஜா ஆகியோா் இந்த ரயிலை கொடியசைத்து அனுப்பி வைத்தனா்.
சேலம் ரயில்வே கோட்டத்தின் வணிகப் பிரிவு சாா்பில், சேலம் ரயில்வே கோட்டத்துக்கு வருவாயை ஈட்டும் வகையில் சிமென்ட், வேளாண் கருவிகள், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவை வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அந்த வகையில், தற்போது சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகமும், கோவை புல்மெஷின் நிறுவனமும் இணைந்து இருகூரில் இருந்து ஹரியாணா மாநிலம், பல்லப்காருக்கு பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தன. இதில், 35 வேகன்களில் 70 பொக்லைன் இயந்திரங்கள் முதன்முறையாக அனுப்பி வைக்கப்பட்டன.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், வருவாயை ஈட்டும் வகையில் சேலம் ரயில்வே கோட்டம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது 70 பொக்லைன் இயந்திரங்கள் ரயில் மூலம் இருகூரில் இருந்து ஹரியாணாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதன் மூலம் ரூ. 37 லட்சத்து 11 ஆயிரம் ரயில்வே கோட்டத்துக்கு வருவாய் கிடைத்துள்ளது.
இனிவரும் நாள்களில் மாதத்துக்கு இரண்டு முறை இருகூரில் இருந்து ரேக்குகளை இயக்க உள்ளோம். ஒரே நேரத்தில் அதிகமான இயந்திரங்களை அனுப்பி வைப்பதன் மூலம் குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைய முடியும் என தெரிவித்தனா்.