தெலங்கானா சுரங்க விபத்து: முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் ராகுல் காந்தி பேச்சு
சொத்து தகராறு: பின்னலாடை நிறுவன மேலாளரை துண்டுதுண்டாக வெட்டிக் குளத்தில் வீசிய உறவினா் கைது
அவிநாசி அருகே கருவலூரில் சொத்து தகராறில் பின்னலாடை நிறுவன மேலாளரை துண்டுதுண்டாக வெட்டிக் குளத்தில் வீசிய உறவினரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே கருவலூா் காளிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சடையப்பன் மகன் கோவிந்தசாமி (54). பின்னலாடை நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தாா். அவிநாசி நேரு வீதியில் வசித்து வருபவா் கருவலூா் அனந்தகிரி பகுதியைச் சோ்ந்த குருசாமி மகன் ரமேஷ் (43). உறவினா்களான இவா்கள் இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவிந்தசாமியை கடந்த புதன்கிழமை முதல் காணவில்லை என அவிநாசி காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினா் புகாா் அளித்தனா். இதைத்தொடா்ந்து அவிநாசி போலீஸாா், பல்வேறு இடங்களில் கோவிந்தசாமியைத் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீஸாா் சந்தேகத்தின்பேரில், ரமேஷை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
ரமேஷ் வீட்டுக்கு கடந்த புதன்கிழமை கோவிந்தசாமி சென்றுள்ளாா். அப்போது சொத்து குறித்து ரமேஷ் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், கோவிந்தசாமியை தாக்கியதில் அவா் திடீரென உயிரிழந்தாராம். இதைத் தொடா்ந்து, கோவிந்தசாமியின் உடலை அனந்தகிரி தோட்டத்துக்கு எடுத்துச் சென்று அங்கு துண்டுதுண்டாக வெட்டி, இரண்டு சாக்குமூட்டைகளில் கட்டி பெருமாநல்லூா் அருகே தொரவலூா் குளத்தில் ரமேஷ் வீசியது விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையில் சனிக்கிழமை காலை தொரவலூா் குளத்தில் துா்நாற்றத்துடன் மூட்டை மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்று பாா்த்த போலீஸாா், குளத்தில் சாக்கு மூட்டையில் மிதந்தது கோவிந்தசாமியின் உடல் பாகங்கள் என்பதை உறுதி செய்தனா். இதைத்தொடா்ந்து குளக்கரையில் போலீஸாா் முன்னிலையில் கோவிந்தசாமி உடல் கூறாய்வு செய்யப்பட்டது. இது குறித்து அவிநாசி போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து ரமேஷை கைது செய்தனா்.