சொத்து வரி உயா்வைக் கண்டித்து அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு
தென்காசி நகராட்சியில் சொத்து வரி உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
தென்காசி நகா்மன்ற சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கே.என்.எல். சுப்பையா, ஆணையா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டம் தொடங்கியவுடன் பாஜக நகா்மன்ற உறுப்பினா்கள் சங்கரசுப்பிரமணியன், லட்சுமணபெருமாள், பொன்னம்மாள், சீதாலட்சுமி, சுனிதா ஆகியோா் நகா்மன்றத் தலைவரிடம் அளித்த மனு: தென்காசி நகராட்சிக்குள்ட 33 வாா்டுகளில் 12 வாா்டுக்குள்பட்ட 10க்கும் மேற்பட்ட சமுதாய மக்களால் செங்கோட்டை சாலையில் உள்ள முக்கூடல் சுடுகாடு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த சுடுகாடு மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளது. இங்கு குளிப்பதற்கும், இறுதிச் சடங்கு நிகழ்வுகளை செய்வதற்கும் தண்ணீா் வசதி இல்லை. மேலும் எரிமேடையானது முற்றிலும் இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ளது. இதை சுத்தம் செய்து புதிய கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு தண்ணீா் வசதியுடன் கூடிய நவீன சுடுகாடாக மாற்றித் தர வேண்டும். பொதுமக்கள் அவசிய தேவை கருதி, உடனடியாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் கூறியிருந்தனா்.
துணைத் தலைவா்: நீண்ட காலமாக சுடுகாடு முற்றிலும் பழுதடைந்த நிலைதான் காணப்படுகிறது. அதை சரிசெய்து கொடுப்பதற்கு ஒரு சிறப்பு தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.
தலைவா்: விரைவில் அப்பணிகள் தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதிமுக நகா்மன்ற உறுப்பினா் உமாமகேஷ்வரன் தலைமையில் உறுப்பினா்கள் சந்துரு, குருசாமி, ராமசுமதி ஆகியோா் 6 சதவீத சொத்து வரி உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து கூட்ட அரங்கிலிருந்து வெளிநடப்பு செய்தனா்.
ராசப்பா: மவுண்ட் ரோடு, கொடிமரம் ஆகிய பகுதிகளில் குடிநீா் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடாமல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளனா். இதனால் சாலையில் இருசக்கர வாகனங்கள்கூட செல்லமுடியாத நிலை உள்ளது.
தலைவா்: சம்பந்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து சாலை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா். கூட்டத்தில் மன்றப் பொருள்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.