சொல்லப் போனால்... எல்லாருக்கும் இல்லையா, தீபாவளிப் பரிசு?
விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள பிகார் மாநிலத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ‘முதல்வர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்’தின் கீழ் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் ரூ. 7,500 கோடி பணத்தை மடைமாற்றி விட்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலுள்ள பிகார் அரசின் – தற்போதுள்ள சட்டப்பேரவையின் - பதவிக் காலம் வரும் நவ. 22 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய சட்டப்பேரவையைத் தேர்ந்தெடுக்க நவ. 5 முதல் 15 தேதிக்குள் மூன்று, நான்கு கட்டங்களாகத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
இன்னும் சில நாள்களில் பிகாருக்குத் தலைமைத் தேர்தல் அலுவலர் ஞானேஷ்குமார் செல்கிறார். மற்றபடி, தேர்தலும் வாக்குப் பதிவுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட வேண்டியது மட்டுமே பாக்கி.
ஏற்கெனவே, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நடந்த இரண்டாவது நாளே, தில்லியில் நடைபெற்ற அதுதொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்கூட பங்கேற்காமல், பிகாருக்குச் சென்று தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி; வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பிரசாரம் செய்கிறார். இன்னொரு பக்கம் வாக்குத் திருட்டுகளை அம்பலப்படுத்திவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பிகாரில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லாரும் பங்கேற்ற, வாக்கு அதிகார பிரசாரப் பயணத்தை மேற்கொண்டார். நிதீஷ் குமாரும் தேஜஸ்வியும்கூட தீவிர பிரசாரத்தில். முழுமையான அரசியல் சூட்டில் கொதிக்கிறது மாநிலம்.
தேர்தலுக்கான எல்லாமும் முனைப்பாக நடந்துகொண்டிருக்க, அறிவிப்பு ஒன்றே மீதமிருக்கும் நிலையில்தான், மகளிர் வாக்கு வங்கியை மடக்கிப் போடும் விதமாக, அதிரடியாக ஓர் திட்டத்தை அறிவித்து, 75 லட்சம் பெண்களுக்கு நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளுக்குத் தலா ரூ. 10 ஆயிரம் வழங்குகிறார்கள். இது பிகார் மாநில அரசின் திட்டம் என்றாலும்கூட காணொலிவழி நடந்த விழாவில் மாநிலத்தின் முதல்வர் நிதீஷ் குமார் சும்மா அமர்ந்திருக்கக் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவரான பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்தார் (ஆமாம், இது மத்திய அரசின் பணமா? மாநில அரசின் பணமா? எந்தத் துறையிலிருந்து?).
75 லட்சம் பெண்களுக்கு ரூ. 10 ஆயிரம் வீதம் நேரடியாகத் தருகிறார் பிரதமர் மோடி, வங்கிக் கணக்குகளுக்கு மோடியே பணத்தை மாற்றிவிடுவார் என்பதாக - சொந்தப் பணத்திலிருந்து தருவோர்கூட இவ்வளவு விளம்பரம் செய்திருக்க மாட்டார்களாக இருக்கும் – நாடு முழுவதும் செய்தி, பிரசாரம், இதனால் கிடைக்கும் மிகப் பெரிய மைலேஜ்!
“பெண்களின் கனவுகளை நனவாக்குவதே மத்திய பா.ஜ.க. அரசின் குறிக்கோள்; பெண்கள் முன்னேறும்போது ஒட்டுமொத்த சமூகமும் முன்னேறும்” என்று விழாவில் பேசிய பிரதமர் மோடி, பிகாரில்20 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ராஷ்டிரிய ஜனதா தள ஆட்சியைக் குறைகூறி, அவர்கள் மீண்டும் வந்துவிடாமல் இருப்பதைப் பெண்கள்தான் உறுதி செய்ய (அதாவது, வாக்களிக்க) வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்!
பிரதமரின் இந்தப் பேச்சில் பெண்களின் துயரங்களை நினைத்து உருக்கமோ உருக்கம்.
மத்தியப் பிரதேசத்திலும் மகாராஷ்டிரத்திலும் இதேபோன்ற பணத் திட்டங்களை அறிவித்து பாரதிய ஜனதா கூட்டணி வெற்றியும் பெற்றிருக்கிறது; ஆனால், அவையெல்லாம் மாதந்தோறும் ஒரு தொகை ரூ. 1250, ரூ. 1500 வழங்கப்படும் என! (மகாராஷ்டித்தில் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னரே மாதந்தோறும் ரூ. 1,500 என அறிவித்துத் தரத் தொடங்கி, வென்று ஆட்சியமைத்த பின் சில மாதங்களே தந்து, பின்னர், நிதிப் பிரச்சினை என்று கூறி நிறுத்திவிட்டிருக்கின்றனர்).
ஆனால், பிகாரிலோ அவற்றுக்கெல்லாம் மேலே... இன்னும் ஒரு படி மேலே சென்று, மிக நெருக்கத்தில், இரு மாதங்கள்கூட இல்லை, சட்டப்பேரவைக்கான தேர்தலை வைத்துக்கொண்டு, ஏதோ முன்பணம் போல, ஒவ்வொரு பெண்ணுக்கும் இப்போதே ரூ. 10 ஆயிரம், முழுக்க முழுக்க சட்டத்துக்கு உள்பட்டுதான், வழங்கப்படுகிறது.
பரிசுப் பணத்தைப் போல திருப்பிச் செலுத்தத் தேவையில்லாத இந்தத் தொகையைத் தாங்கள் விரும்பியபடி எத்தகைய வாழ்வாதாரத் தொழில்களுக்கும் சேவைகளுக்கும் பெண்கள் பயன்படுத்திக் கொள்ளலாமாம். எந்த வகையான கட்டுப்பாடும் இல்லை. சுருக்கமாகச் சொன்னால், தீபாவளிச் செலவுக்குக்கூட வைத்துக் கொள்ளலாம்!
இதுமட்டுமின்றி மேலும் புத்திசாலித்தனமாக இந்த இடத்தில் ஒரு தூண்டிலையும் (அல்லது நங்கூரம் என்றுகூட சொல்லலாம்) போட்டு வைத்திருக்கிறார்கள். இந்த ரூ. 10 ஆயிரத்தைக் கொண்டு தொழிலில் சிறப்பாகச் செயல்படும் பெண்களுக்கு அடுத்தடுத்த கட்டங்களில் – அதாவது எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, நிதீஷ் குமாரோ பாரதிய ஜனதாவோ, ஆட்சியமைத்த பிறகு (!) – தொழில் முனைவோருக்கான பயிற்சியுடன் ரூ. 2 லட்சம் வரை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது – இதுவும் இலவசமா? அல்லது கடனா? தெரியவில்லை. ஆக, மோடி – நிதீஷ் குமார் கூட்டணிக்கு வாய்ப்பளித்து வெற்றி பெறச் செய்தால் ரூ. 10 ஆயிரத்தின் தொடர்ச்சியாக ரூ. 2 லட்சம் வரையிலும் கிடைக்கக் கூடும் (உள்ளபடியே இது தூண்டிலா, நங்கூரமா?)!
ஏற்கெனவே, வாக்குத் திருட்டு எனத் தேர்தல் ஆணையத்துக்கு எதிராகப் பக்கம் பக்கமாக வாக்காளர் விவரங்களைக் குற்றச்சாட்டுகளாகப் பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி. ஆனால், இவற்றுக்குத் தேர்தல் ஆணையத்தைவிடவும் முன்னதாக பாரதிய ஜனதா தலைவர்களில் சிலர்தான் பதில் சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.
எதுவொன்றையும் திருடத்தானே கூடாது, விலை கொடுத்து வாங்கலாம்தானே. ஒருகாலத்தில் – 1970களில் – சில தொகுதிகளில் ஒரு வாக்கிற்கு ரூ. 2 வீதம் கொடுத்தார்கள் என்று மூத்தவர்கள் சொல்வார்கள்; கொடுத்திருக்கிறார்கள். தொடர்ந்து வந்த தேர்தல்களில் இலைமறைவு காய்மறைவாக, கூச்சத்துடனும் குற்றவுணர்வுடனும் ஆனால், வளர்ந்துவந்து கொண்டிருந்த இந்தப் பணப் பட்டுவாடா, ஒரு கட்டத்தில் எல்லாருக்குமே இயல்பாகிவிட்டது; இங்கே எவ்வளவு? அங்கே எவ்வளவு? என்று விசாரித்துக் கொள்கிற அளவுக்கு. மேலும், நவீன தொழில்நுட்பங்களையும் உள்வாங்கிக்கொண்டு இப்போது அடுத்த கட்டத்தை நோக்கி நடந்துகொண்டிருக்கிறது.
தேர்தலுக்கு முன்னதாகத் திட்டங்களின் பெயரால் சட்டப்பூர்வமாகவே பணம் வழங்கும் ஆளுங்கூட்டணியின் தற்போதைய அதிரடித் திட்டத்தால் பிகாரில் வாக்காளர் மத்தியில் எத்தகைய விளைவுகள் இருக்கும்? 75 லட்சம் பெண்கள் தலா ரூ. 10 ஆயிரம் பெற்றார்கள் என்றால், அவர்களுடைய வாக்குகள், அவர்களைச் சுற்றியுள்ள குடும்பத்தினருடைய வாக்குகள் எந்தப் பக்கம் பாயும்?
ஆளும் கூட்டணியின் இந்த அதிரடித் திட்டத்தை எதிர்க்கட்சிகள் எல்லாம் கடுமையாக விமர்சனம் செய்கின்றன – சும்மா வரும் பணத்தைக் கெடுக்கிறார்களே என்று வாக்காளர்கள் நினைத்துவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வுடன்.
ஏற்கெனவே, பிகாரில் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள். வாக்காளர் பட்டியல் சிறப்பு முனைப்புத் திருத்தம் என்ற பெயரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுவிட்டனர், வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. புலம்பெயர்ந்து பிற மாநிலங்களுக்குப் பிழைக்கச் சென்றிருப்பவர்களால் தங்கள் பெயர்களை இணைத்துக்கொள்ள முடியவில்லை. தேர்தல் ஆணையத்தைப் பொருத்தவரை வாக்காளர் பட்டியலில் சேர ஆதார் அட்டை அடையாளம் அல்ல... என ஏராளமான குழப்பங்கள், குற்றச்சாட்டுகளுடன் பிரச்சினை உச்ச நீதிமன்றம் வரை ஊடாடிக் கொண்டிருந்தது.
எதிர்க்கட்சிகளைப் பொருத்தவரை இப்போது இந்த அட்வான்ஸ் பேமென்ட் வேறு கூடுதல் சுமையாகச் சேர்ந்துகொண்டுவிட்டது!
என்னதான் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகுதான் திட்டங்களை அறிவிக்கக் கூடாது என்று விதிகள் இருந்தாலும், தேர்தலை அறிவிக்கச் சில வாரங்களேகூட இல்லாதபோது இவ்வாறு பணம் தருகிற, வாக்காளர்களிடம் செல்வாக்குச் செலுத்தக் கூடிய, மனதை மாற்றக் கூடிய, கை மேல் காசு தருகிற திட்டங்களை அறிவிப்பது என்ன நியாயம்? என்று எதிர்க்கட்சிகளால் குமுற மட்டும்தான் முடிகிறது... ஆனால், நியாயமான, நேர்மையான தேர்தலை உறுதி செய்ய வேண்டிய தேர்தல் ஆணையமோ இதையொரு பொருட்டாகவே கண்டுகொள்ளவில்லை; இருக்கிற இடமே தெரியவில்லை. சமூக ஊடகங்களில் கழுவி ஊற்றுகிறார்கள். ஆனால், இதுபற்றி இதுவரையில் ஆணையத்தின் தரப்பிலிருந்து எவ்விதக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை (தேர்தல் ஆணையம் என்றாலே அரசியல் தலைவர்களையும் அரசுகளிலிருந்து அதிகாரிகள் வரையில் அத்தனை பேரையும் கிடுகிடுக்கச் செய்த டி.என். சேஷன் காலம் என்றொன்றும் இருந்தது).
நியாயமான, நேர்மையான தேர்தல் நடந்து, முறைப்படியான ஆட்சி அமைய வேண்டுமென்றால், ஆட்சிக்காலம் முடிந்து வெளியேற வேண்டிய தருணத்தில் - கடைசி நேரத்தில், இதுபோன்ற ‘புதுமைகளை’ச் செய்ய அரசுகளையும் அரசியல்வாதிகளையும் அனுமதிப்பது எந்த வகையிலும் நல்லதாக இருக்காது – ஜனநாயகத்துக்கு. இப்போதே குடியரசுத் தலைவரோ, உச்ச நீதிமன்றமோ (அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கும் தேர்தல் ஆணையமோ?) தலையிட்டு இந்தப் போக்கை நேர்செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது – குறைந்தபட்சம் மக்களுடைய வாக்குரிமைக்கான அர்த்தத்தை உறுதி செய்வதற்காகவேனும்.
[என்ன செய்தாவது அதிகாரத்தைக் கைப்பற்றுவது; பிறகு அதே அதிகாரத்தில் நீடித்து நிலைத்திருக்க, அந்த அதிகாரத்தைக் கொண்டே என்ன வேண்டுமானாலும் செய்வது – நன்றாகத்தான் இருக்கிறது நம் ஜனநாயக அரசியலின் ஃபார்முலா].
ஏற்கெனவே, தங்கள் தொகுதி எம்எல்ஏவோ, எம்பியோ திடீரென இறந்துவிட்டால் துக்கப்படுவதற்குப் பதிலாக சந்தோஷப்படக் கூடிய அளவிலான மனநிலைக்கு வந்துவிட்டார்கள் மக்கள். தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தால் நிறைய தலைவர்கள் வருவார்கள், நிறைய பிரசாரம் நடைபெறும், நிறைய திட்டங்கள் வரும். கூடவே நிறைய பணமும் கைக்கு வந்துசேரும் என்று நினைக்கிறார்கள். அப்படியிருக்க, சட்டப்பேரவைத் தேர்தலிலேயே இப்படியென்றால்...
இனி நம்முடைய மாநிலத்தில் எப்போது சட்டப்பேரவைக்குத் தேர்தல் வரும்? நாடு முழுவதும் இன்னொரு முறை தேர்தல் வந்தால் எப்படியிருக்கும்? பிரதமர் மோடி சொன்னபடி, பெண்களின் கனவுகளை நனவாக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் குறிக்கோளை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தினால் நன்றாகத்தானே இருக்கும்? தலைக்குப் பத்தாயிரம் என்றால் சும்மாவா?
கொடுக்கிறோம் என்று வாக்குறுதி அளித்துக் கேட்பதைவிட, கொடுத்துவிட்டு வாக்குக் கேட்கப் போனால்... தவிர இந்தப் பணத்தை யாரும் கையிலிருந்தோ, கட்சியிலிருந்தோ கொடுக்க வேண்டியதில்லை, எல்லாம் கவர்ன்மென்ட் காசுதானே. நல்ல உத்தி! இத்தனைக்கும் ஒருகாலத்தில் ‘இலவச கலாசாரத்தைக்’ கடுமையாக விமர்சித்தவர்தான் பிரதமர் மோடி.
2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, வெளிநாட்டிலிருக்கும் கறுப்புப் பணம் எல்லாம் மீட்கப்பட்டு, நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் செலுத்தப்படும் என்றார் பிரதமர் வேட்பாளராக வலம்வந்த நரேந்திர மோடி. ஆட்சிக்கு வந்த பிறகு அவ்வப்போது யாராவது இந்தப் பதினைந்து லட்சத்தை நினைவுபடுத்துவார்கள். ஒருகட்டத்தில் அப்படியெல்லாம் தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசவேயில்லையே என்று கூறிவிட்டனர். இன்னமும்கூட அந்த 15 லட்சத்தை நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருப்பவர்கள் இருக்கக் கூடும்.
ஆனால், இந்தப் புதிய முறை கொஞ்சம் பரவாயில்லை. ஏதோ பொன் வைக்கிற இடத்தில் பூ வைத்தாற்போல தேர்தலுக்கு முன்னதாகவே ஒரு பத்தாயிரத்தைத் தந்துவிடுகிறார்கள், வென்றாலும் சரி, தோற்றாலும் சரி. கேஷ் கியாரண்டி!
இவ்வளவு செய்து இவர்களெல்லாம் தேர்தல்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் என்ன செய்யப் போகிறார்கள்? மக்களுக்கு மட்டுமான சேவைகளைத்தானா? அப்படியானால் கடந்த ஐந்தாண்டுகளில், அல்லது அதற்கு முன்னர் செய்த சேவைகளை எல்லாம் சொல்லி வாக்குக் கேட்கலாமே? ஏன் முடியாமல் போய்விடுகிறது?
சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெறவிருக்கிற பிகாரில் மட்டும்தான் பெண்களை வலுப்படுத்த வேண்டுமா? ‘அற்புதமான’ இந்தத் திட்டத்தை உடனடியாக ஏன் எல்லா மாநிலங்களுக்கும் அறிமுகப்படுத்தக் கூடாது?
ம். எப்படியோ, தேர்தலோ, பெண்கள் முன்னேற்றமோ, பிகார் மக்களுக்குப் பெரும் கொண்டாட்டம்தான் இந்த ஆண்டுத் தீபாவளி!