கரூர் நெரிசல் சம்பவம்: வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் கைது!
கரூர் நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பிய பிரபல யூடியூபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை (செப்.27) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள காலையில் வருவதாக அறிவித்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இரவு 7 மணி அளவில்தான் வந்தார்.
இதனால், ஏராளமான பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் விஜய்யை பார்க்க வேண்டும் என்று நோக்கில் கட்டுக்கடங்காமல் கூட்டம் கூடியது.
இந்தக் கூட்டத்தில் நேரிட்ட நெரிசலில் சிக்கிய ஒன்றுமரியா 9 அப்பாவி குழந்தைகள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
போதிய திட்டமிடல், விஜய் தாமதமாக வந்தது உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக தவெக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், முதல் தகவலறிக்கைப் பதியப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், தவெக பொதுச் செயலர் புஸ்ஸி என். ஆனந்த், துணைப் பொதுச் செயலர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலினும், காவல் துறையினர் எச்சரித்து இருந்தனர்.
இந்த நிலையில், ரெட் ஃபிக்ஸ் சேனலின் பிரபல யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டை காவல் துறையினர் இன்று (செப்.30) கைது செய்தனர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து பெலிக்ஸ் ஜெரால்டிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.